-யதீந்திரா
இந்தியா ஒரு பிராந்திய சக்தி. ஈழத் தமிழர்களுக்கான உடனடி அயல்நாடு. இது ஒரு மாறாத, ஒரு போதும் மாற்றவே முடியாத பிராந்திய யதார்த்தமாகும். இந்தியா தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றார். ஆனாலும் இந்தியாவை புரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு குழப்ப நிலை இருக்கவே செய்கின்றது. இதற்கு என்ன காரணம்? பொதுவாகவே அரசியல் விவகாரங்களை எங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கக் கூடாது. மாறாக, யதார்தத்திலிருந்து நோக்க வேண்டும். குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர், அப்துல்லா ஒச்சலான் கூறுவது போன்று, ‘நேற்றையவற்றுடன் இன்றையவற்றை ஒப்பிடுவதை விட, அது இன்றெப்படி ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது என்பதைப் பற்றியே நாம் பேச வேண்டும்’ என்பார். சூழ்நிலைகள் மாறுகின்ற போது நமது பார்வைகளும் மாற வேண்டும். அணுகுமுறைகள் மாற வேண்டும். இல்லாவிட்டால், எங்களால் ஒரு போதுமே முன்னோக்கி பயணிக்க முடியாது. யுத்தம் நிறைவுற்று கடந்த பன்னிரெண்டு வருடங்களாக தமிழ் தேசிய அரசியலால் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள் பற்றிய விவாதங்கள், அவ்வப்போது கொழும்பிற்கு வந்து செல்லும் மேற்குலக ராஜதந்திரிகளுடனான தேனீர் சந்திப்புக்கள். இப்படித்தான் கடந்த பன்னிரெண்டு வருடங்கள் நகர்ந்திருக்கின்றன.
இந்த பின்புலத்தில்தான் இந்தியாவை நோக்கிச் செல்லுதல் என்னும் கோசம் மெதுவாக மீளவும் எட்டிப்பார்த்தது. மீளவும் செல்லுதல் என்று கூறும் போது, முன்னரும் நாம் சென்றவர்கள் என்பதுதான் அதன் பொருளாகும். இந்தியா ஈழத் தமிழர் சார்பில் இராணுவத் தலையீட்டை செய்த நாடு. தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினையொன்று இருப்பதை இன்றும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரேயொரு நாடு. இலங்கை தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் தமிழர் விவகாரம் தவிர்க்க முடியாதது. எவ்வாறு அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமை என்பது பிரிக்க முடியாத விவகாரமோ, அவ்வாறுதான் இந்தியாவின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் ஈழத் தமிழர் விவகாரமும் தவிர்க்க முடியாததாகும். இந்த அடிப்படையில்தான், இந்தியா தொடர்ந்தும் சில விடயங்களை வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இதனை சிங்கள தேசியவாத தரப்புக்கள் விரும்பவில்லை. 51வது ஜெனிவா கூட்டத் தொடரின் போது, இந்திய பிரதிநிதி வெளிப்படுத்தி கருத்துக்களை சிங்கள தேசியவாத தரப்புக்கள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆங்கிலத்தில் எழுதும் சிங்கள அரசியல் ஆய்வாளர் ஒருவர், இந்தியா எதிரியை மீளவும் உறுப்படுத்தியுள்ளதாக எழுதியிருக்கின்றார். தமிழர் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை, சிங்களவர்களுக்கு எதிரான ஒன்றாகவே, தென்னிலங்கை சிங்கள சக்திகள் நோக்குகின்றன. ஏனெனில், சிங்கள தேசியவாத தரப்புக்களை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் அழிவோடு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. ஒரு பிரச்சினை முடிந்துவிட்ட பின்னர், அது பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை என்பதே பொதுவான சிங்கள உளவியலாக இருக்கின்றது. இந்த நிலையில்தான், இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினையொன்று இருப்பதை வலியுறுத்தி வருகின்றது. ஒரு வேளை இந்தியா தமிழர்களின் பிரச்சினையை முற்றிலுமாக கைவிடுமானால், தமிழர் பிரச்சினைக்கான சர்வதேச நியாயம் என்பது முற்றிலும் இல்லாமல் போய்விடும். இதனை தமிழ் தேசியம் பேசுவோர் எந்தளவு புரிந்து வைத்திருக்கின்றனர்?
தமிழ் தேசிய அரசியல் சூழலில் இடம்பெறும் விடயங்களை நோக்கினால் இந்தியா தொடர்பில் குழப்பமான புரிதல்களே பலரிடம் இருப்பதாக தெரிகின்றது. பெரும்பாண்மையான பிரிவினர் இந்தியாவின் தவிர்க்கவே முடியாத இடத்தை புரிந்து வைத்திருக்கின்றனர் ஆனால் விடயங்களை எவ்வாறு அணுகுவது என்பதில் அவர்கள் மத்தியில் குழப்பங்கள் உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகளை இதற்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவது தரப்பினர் கடந்தகாலத்தை – அதாவது இந்திய அமைதிப் படைகள் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி, இந்திய எதிர்ப்பை தமிழ் தேசிய அரசியலில் பாதுகாக்க விருப்பும் தரப்பினர். இன்று தமிழ் சூழலில் இந்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் பிரதான தரப்பினராக, கஜேந்திர குமார் தலைமையிலான, அகில இலங்கை தமிழ் காங்கிரஷை குறிப்பிடலாம் இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் இடம்பெற்ற இந்திய இராணுவ அத்துமீறல்களை சுட்டிக்காட், இந்திய இராணுவமும் இனப்படுகொலையில் ஈடுபட்டதான பிரச்சாரங்களை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே முன்னெடுத்துவருகின்றனர். ஒரு புறம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் தாம் கரிசனையாக இருப்பதாக கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ – மறுபுறம், இந்திய எதிர்ப்பு அரசியலை தமிழ் தேசியத்திற்குள் பேணிப்பாதுகாக்க முற்படுவதை எவ்வாறு புரிந்துகொள்வது?
தமிழர் பகுதியில், இந்தியா, ஒரு படைத்தளத்தை நிறுவினால் கூட அதில் தங்களுக்கு பிரச்சினையில்லை என்றும் கூட, கஜேந்திரகுமார் ஒரு முறை கூறியிருந்தார். இந்தக் கட்டுரையாளர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தொலைகாட்சி ஒன்றிற்காக மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். ஒரு புறம் தாங்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல என்று கூற முற்படும் கஜேந்திரன்களோ, மறுபுறம் இந்தியாவிற்கு எதிரான வெகுசன அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் முழு மூச்சாக செயலாற்றுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இந்திய படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறிய சிலர், யாழ்ப்பாண பிரம்படியில் ஒன்றுகூடியிருந்தனர். இதிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியோடு இணைந்து செயற்படுபவர்களே தெரிந்தனர். இதன் நோக்கம் என்ன? இந்தியாவும் இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை சொல்லுவதால் யாருக்கு நன்மை கிட்டும்? இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன?
தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான அப்பிராயங்களை பரப்புவது மறுபுறமாக யாருக்கு பயன்படும். அதனை யார் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்? நிச்சயமாக சீனாவே இதனை பயன்படுத்திக் கொள்ளும். தமிழ் மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பை விதைக்கும் தரப்பினரும் இருக்கின்றனர் என்பதை சரியாக கணக்கும் போட்டே, சீனா வடக்கு கிழக்கில் ஆர்வம் காண்பித்துவருகின்றது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, யாழ் பல்கலைக்கழகத்தின் விவகாரம் ஒன்றும் பேசு பொருளாக இருக்கின்றது. யாழ் பல்கலைக்கழகம் சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றோடு உடன்பாடு செய்திருக்கின்றது. ஆரம்பத்தில் இதனை செய்யப் போவதில்லையென்று கூறிவந்த யாழ் பல்கலைக்கழக துனை வேந்தர், பின்னர் உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கின்றார். இதிலுள்ள சில பாதகமான விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் கூட, அவர் எதனையும் கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழங்களில் ஒன்றும், யாழ் பல்கலைக்கழக்கதோடு இணைந்து செயற்படுவதற்கான முன்மொழிவை முன்வைத்திருக்கின்றது.
இலங்கையின் இரண்டு முன்னணி பல்கலைக்கழங்களோடு இவ்வாறான உடன்பாட்டை செய்துகொள்ளவுள்ளதாக இந்திய தூதரகம் கூறியபோது, இரண்டு தென்பகுதி பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வழங்கியிருக்கின்றது. ஆனால் ஒன்று உங்களுக்கு மற்றையது தமிழ் பகுதிகளில் இருக்கும் பல்கலைக்கழக்கத்திற்கு வழங்கப்பட வேண்டுமென்று இந்தியா குறிப்பிட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் குறித்த வாய்ப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உடன்பாட்டில் உள்ள விடயங்கள் சிக்கலானதென்று கூறி, யாழ் பல்கலைக்கழக துனை வேந்தர் இதனை இழுத்தடிக்க முற்படுவதாக கூறப்படுகின்றது. சீனா விடயத்தை பெரிது படுத்தத் தேவையில்லை. ஏனெனில், உதவி கிடைக்கும் போது எடுத்துக் கொள்வதில் ஏன் தயங்க வேண்டும். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர். அதனை இந்தக் கட்டுரையாளர் மறுக்கவில்லை ஆனால் கேள்வி அவ்வாறான உதவி இந்தியாவிடமிருந்து வருகின்ற போது – அதனை ஏன் இழுத்தடிக்க வேண்டும். சீன பல்கலைக் கழகத்தோடு உடன்பாடு செய்ய முடியுமென்றால் – ஏன் இந்திய பல்கலைக்கழக்கதோடு உடன்பாடு செய்வதற்கு தயக்கம் காண்பிக்க வேண்டும்? அவ்வாறாயின் யாழ் பல்கலைக்கழக துனை வேந்தரின் செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலோடு தொடர்புபட்டதா?
வடக்கு கிழக்கிற்குள் சீனா ஆர்வம் காண்பிப்பது அடிப்படையில் இந்தியாவை சீண்டும் செயற்பாடுகள்தான். சீனா தமிழ் மக்களின் நலன்கள் மீதான அக்கறையிலிருந்து தமிழர் பகுதிக்குள் வரவில்லை. சீனாவுடன் பணியாற்றலாம் என்று கருதுபவர்கள் இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்தியாவையும் சீனாவையும் சம தூரத்தில் வைத்து கையாளப் போவதாக எவரேனும் நினைத்தால் அவர்கள் நல்ல மனநல மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் தமிழ் சமூகம் அவ்வாறான ஆளுமையுள்ள சமூகமல்ல. கையறு நிலையிலிருக்கும் சமூகமொன்று, இருக்கின்ற ஒரளவான நட்பு சக்திகளையும் இழந்துவிடக் கூடாது. இந்த அடிப்படையில் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சீனா அதன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, தமிழர்களின் அரசியல் நியாயத்தை ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால், அதன் பின்னர் இது பற்றி உரையாடலாம்.
இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று ஒரு தரப்பினர் முயற்சிக்கின்ற போது, மறுபுறும் அதன் முக்கியத்துவத்தை மறுதலிக்கும் நோக்கிலான செயற்பாடுகளும், தொடர்கின்றன. இதனை சுட்டிக்காட்டும் நோக்கிலேயே சில விடயங்களை இங்கு பகிர்ந்திருந்தேன். இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்தியாவை தவிர்த்து செல்ல முடியுமென்பது, வேண்டுமானால் கனவில் சாத்தியப்படலாம். ஒரு போதும் நிஜத்தில் சாத்தியப்படாது. அதே வேளை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று சிந்திப்பவர்களும் முதலில் சில அடிப்படைகளை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடாக ஒன்று இருக்கின்ற போது, அதற்கு மாறான சுலோகங்களோடு இந்தியாவை நோக்கிச் செல்ல முடியாது. செல்லலாம் ஆனால் அதனால் பயனில்லை.
இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்தியாவின் தமிழர்கள் தொடர்பான வெளிவிவகார அணுகுமுறையானது, அன்றிலிருந்து இன்றுவரையில் ஒன்றுதான். அதாவது, பிளவுபடாத இலங்கைக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான அரசியல் தீர்வொன்றிற்கு தமிழ் மக்கள் உரித்துள்ளவர்கள். அந்தத் தீர்வு இந்தியாவை பொறுத்தவரையில், இந்திய-இலங்கை ஒப்பந்ததத்தின் விளைவான மாகாண சபை முறைமையை அடிப்படையாகக் கொண்டது. இதனை புதுடில்லியில் மாநாடுகள் நடத்துவதன் மூலம் மாற்றியமைக்காலாம் என்று எவரேனும் நினைத்தால், அது அவர்களது பிரச்சினையாகும். எனவே புதுடில்லியை நோக்கிச் செல்ல வேண்டுமென்று எண்ணுபவர்கள் இந்திய அயலுறவுக் கொள்கையை புரிந்து கொண்டு, இந்தியா எதனை வலியுறுத்தி வருகின்றதோ, அதற்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே இந்தியாவிடம் செல்ல வேண்டும். ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையை பிறிதொருவர் மாற்றியமைக்க முடியாது. பலம்பொருந்திய நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கையானது, உலக அரசியல் மாற்றங்களால் மாற்றமடையுமே தவிர, வேறு எந்தவொரு நகர்வுகளாலும் நாடுகளின் வெளிவிவகார கொள்கை மாறுவதில்லை. வேண்டுமனால், வெளிவிவகார அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.