இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (08) நிறைவேற்றப்பட்டது.
நேற்றைய தமிழ்நாடு சட்டமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
இது இலங்கைத் தமிழர்களை காயப்படுத்துகிறது. இந்த சட்டம் அகதிகளை தழுவுவதற்குப் பதிலாக மதம் மற்றும் பிறப்பிட அடிப்படையில் பிரிப்பதாக உள்ளது. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது.
“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அ.தி.மு.க.வினர் வெளியேறினர் என்பதே உண்மை. இந்த தீர்மானத்தை ஆதரிக்க.. எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை.
அதனால் வெளிநடப்பு செய்துள்ளார்கள். எங்கள் வாக்குறுதியில் நாங்கள் கூறியது போலவே தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். குடியுரிமை பெற மதம் அடிப்படை கிடையாது” என்றார்.
இதன்போது, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் (அ.தி.மு.க)சபையில் இருந்து வெளி நடப்பு செய்திருந்தனர். “ஆதரிக்க மனமில்லாமல் அ.தி.மு.க.வினர் வெளியேறினர் என்பதே உண்மை என்று முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக எழுந்த கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தமிழக அரசு முடக்குகிறது என்று சில கருத்துகளை கூறினார். (கே.பி.முனுசாமி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்) பூஜ்ய நேரத்தில் கேள்வி தான் கேட்க முடியும். விவாதம் பண்ண முடியாது. அரசியல் மேடை போன்று பேச முடியாது. பூஜ்ய நேரத்தில் பேசவேண்டும் என்றால் சபாநாயகரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார் சபாநாயகர்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கே.பி.முனுசாமி பேச அனுமதிக்க வேண்டும் என கோரிநின்றார். என்னிடம் முன் அனுமதி பெறாமல் எப்படி பேச முடியும் என வினவிய சபாநாயகர் அப்படி பேசினால் அமைச்சரிடம் எப்படி பதில் கிடைக்கும். முடிந்த ஒரு பிரச்சனை பற்றி ஏன் பேச முயற்சிக்கிறீர்கள். இந்த பிரச்சனை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவாக பதில்கூறியுள்ளார். அதனால் பேச அனுமதிக்க முடியாது.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவர் தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியில் சென்றனர்.