இந்திய பொருளாதார மண்டலத்தை அண்மித்துள்ள சீன ஆய்வுக் கப்பல்

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த தரவுகளுக்கு அமைய நேற்று முதல் குறித்த சீன கப்பல் இந்தியாவிற்கு சொந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், மிகக் குறைந்த வேகத்தில் பயணிக்கிறது.

மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நேற்று காலை நுழைந்த Shi Yan 6 கப்பலை நிக்கோபார் தீவுகள் அருகே அவதானிக்க முடிந்தது.

இலங்கை நோக்கி நேற்று பகல் வந்த கப்பல், நேற்று மாலை வங்காள விரிகுடாவை நோக்கி திரும்பி, நிக்கோபார் தீவுகளுக்கு உரிமம் கோருகின்ற இந்தியாவிற்கு சொந்தமான பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் கடல் எல்லையை அண்மித்து தமது பயணத்தை மெதுவாக முன்னெடுத்தது.

இவர்களின் புதிய பாதையை அவதானிக்கும்போது, ​​Ninety East Ridge எனப்படும் கடலின் அடிவாரத்திலுள்ள மலைத்தொடரின் மேற்பரப்பில் பயணிக்கின்றமை தெரிகிறது.

இதற்கு முன்னர் வந்த,YUAN WANG 5 கப்பல் ஊடாகவும் சீனா கடந்த மூன்று ஆண்டுகளில், Yen Hong எனும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலையும் பயன்படுத்தி குறித்த பகுதிகளில் ஆய்வுகளை நடத்தியது.

இதனிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தியாவும் அமெரிக்காவும் கடலுக்குள் உள்ள மலைகளைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.