கொழும்புத் துறைமுகத் திட்டத்தை இலங்கை ரத்து செய்தமைக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக 400 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துமாறு இந்தியா கேட்டுக் கொண்டதாக வெளியான இணைய ஊடக அறிக்கைகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகம் பதில் வழங்கியுள்ளது.
இந்திய மத்திய வங்கியும், இலங்கை மத்திய வங்கியும் 2020 ஜூலை 31இல் மூன்று மாத அடிப்படையில் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 400 மில்லியன் டொலர் இலங்கையின் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச நாணயநிதியத்துடன் அலுவலர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தையை மேற்கொண்ட நிலையில் இந்த மீள்செலுத்துகை காலம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி நீடிக்கப்பட்டது.
எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை மத்திய வங்கி வெற்றிக்கரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமை காரணமாக 2021 பெப்ரவரி 5ஆம் திகதியன்று உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவர இந்திய மத்திய வங்கி தீர்மானித்ததாக இந்திய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்தியா தனது சர்வதேச மற்றும் இருதரப்பு கடமைகள் அனைத்தையும் உரிய முறையில் பின்பற்றுகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் 2019ஆம் ஆண்டில் செய்யப்பட்ட உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியதை அடுத்து, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளில் சமீபத்தில் ஒரு புதிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா தனது அதிருப்தியை கடந்த செவ்வாயன்று இலங்கை தலைவர்களிடம் முறையாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.