இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயத்துக்கு தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (19) மாலை, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், எல்லா மீனவர்களும் எங்கே மீன்வளம் இருக்கின்றதோ அந்த மீன் வளத்தை தேடிப் போவது என்பது இயற்கையான ஒன்று என்றார்.
இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு எதிராக, மீனவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என்பது, சரியான வழிமுறை அல்ல எனத் தெரிவித்த அவர், தாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை நடத்த உதவி ஒத்தாசையாக இருந்தது தமிழகம் எனவும் கூறினார்.
‘தமிழகத்தில், இலட்சக்கணக்கான எங்களுடைய மக்கள் எதிலிகளாக போயுள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடக்கம் அனைத்து தேவைகளையும் தமிழக அரசே மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது என்பது உண்மை. ஆனால் அதை பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒரு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு கண்டு, சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், அவர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களை எமது தொழிலாளர்கள் தாக்குவது, எமது மீனவர்களை இந்திய தொழிலாளர்கள் தாக்குவது ஏற்புடைய ஒரு விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள மீன்பிடித்துறை அமைச்சரும் அவர் சார் அதிகாரிகளும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறினார்.
‘தென்பகுதி மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் மேற்கொள்கின்றார்கள். அதற்கு எதிரான எந்தத் தரப்பிலிருந்தும் எந்த அரசியல்வாதியும் போராட்டங்களை மேற்கொண்டதில்லை. அதேபோல், தென் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில், சிங்கள மீனவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதற்கு எதிராக எங்களுடைய அரசியல் வாதிகள் யாராவது போராட்டம் மேற்கொண்டார்களா? அவ்வாறான விடயங்கள் எதுவும் நடக்கவில்லை’ என்றும், சுரேஷ் கூறினார்.