ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
01. விவசாய மற்றும் ஏனைய துறைகளில் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்காக ஜப்பான் எஹிம் மாநிலத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
ஜப்பான் எஹிம் மாநிலத்தில் விவசாயம், உணவுப் பதனிடல் உள்ளிட்ட ஏனைய தொழிற்துறைகளில் குறிப்பாக அப்பிரதேசத்தில் வியாபித்துள்ள சிற்ரஸ் (Citrus) பயிரிடல் துறையில் காணப்படும் தொழில்களில் ஈடுபடுவதற்காக இலங்கையின் தொழிநுட்ப பயிலுநர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக குறித்த மாநிலத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2021.07.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, விசேட திறன்களுடன் கூடிய இலங்கையர்களுக்கு அத்தகைய தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்புக்கள் மற்றும் சந்தைப் பன்முகப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் ஜப்பான் எஹிம் மாநிலத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஐக்கிய நாடுகள் சபையின் கல்விசார், விஞ்ஞானம்சார் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைப்பின் (யுனெஸ்கோ அமைப்பு) கீழ் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்காக ஆராய்ச்சி வழங்கல்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்விசார், விஞ்ஞானம்சார் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைப்பின் (யுனெஸ்கோ அமைப்பு) கீழ் இயங்கும் ‘அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கான அமைப்பு’ இனால் செயற்படுத்தப்படும் ‘அடிப்படை தொழில்வாண்மை கூட்டு வேலைத்திட்டம்’ இற்குப் பொருத்தமான ஆய்வுக் கருத்திட்டமாகக் கருதி ஆய்வு ஒதுக்கீடுகளை வழங்குவதற்காக ஐந்து (05) இலங்கை பெண் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, அத்தகைய ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பெண் விஞ்ஞானிகள் பணிபுரியும் பல்கலைக்கழகங்கள் மற்றும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், குறித்த பெண் விஞ்ஞானிகள் மற்றும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையிலான ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுரிமையாளர்களுக்கு உரித்தாகும் நிவாரணங்களை வழங்குதலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளை வழங்கலும்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் அனைத்துக் கட்டுமானங்களும் தற்போது நிறைவடைந்து வருவதுடன், இக்கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் எதிர்வரும் 06 மாதங்களில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் சுரங்க அகழ்வின் போது ஏற்பட்ட நீர்க்கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்கான அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி விடுவிப்பு வழங்கல் பத்திரங்களை வழங்குவதற்கும், மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சிகள் நிறுவனத்தால் அகற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும், முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டியதுமான வீடுகளுக்கு துரிதமான இழப்பீட்டை வழங்குவதற்கும், மீளவும் குடியமர்த்தப்பட வேண்டிய வீட்டுரிமையாளர்களின் காணிகளில் திட்டவட்டமான நிபந்தனைகளின் கீழ் பயிரிடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. டிஜிட்டல் அரசுக்கான மின்னஞ்சல் மற்றும் கூட்டு நெறிமுறை
தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றை ( Smart Nation ) உருவாக்குவதே தேசிய கொள்கைச் சட்டகத்தின் நோக்கமாகும். அதன்கீழ் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அரசை தாபித்தல், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கல் போன்றன அரசின் தொலைநோக்கை வெற்றியடையச் செய்யும் மூலோபாயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச அலுவலகங்களில் பயன்பாட்டுக்காக சமகால தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இயலளவை அதிகரித்துக் – குறைக்கக் கூடியவாறான பாதுகாப்பான தொடர்பாடல் பணித்தளமொன்றை ( Communication Platform ) உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் விசேடமாக அரசதுறைப் பாவனைக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட கூட்டான மின்னஞ்சல் பணித்தளத்தை ( E-mail and Collaboration Platform ) செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கான 100,000 கூட்டான மின்னஞ்சல் பணித்தளப் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும், அதன் முதற்கட்டமாக 30,000 மின்னஞ்சல் பணித்தளப் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பற்சிகிச்சைகளுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை விநியோகிப்பதற்கான பெறுகை வழங்கல்
நோயாளர்களின் பற்சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபயோகப் பொருட்களை விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிப் பெறுகை கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 09 விலைமுறிகள் கிடைத்துள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு, விபரங்களுடன் கூடியதாக பதிலளித்துள்ள குறைந்த விலைமனுக் கொண்ட விலைமுறிதாரர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளுக்கு வசதியளிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளிநாட்டு செலாவணிச் சட்டம் உள்ளிட்ட தற்போது நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களிலிருந்து விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை குறித்தொதுக்கி வழங்குவதற்காக கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழு தேவையான சட்டங்கள் மற்றும் கட்டளைகளை வெளியிடும்ஃபிரகடனப்படுத்தும் வரைக்கும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்குள் முதலீடுகளுக்கான வசதியளிப்புக்களை மேற்கொள்வதற்காக வேறானதொரு பொறிமுறையை அறிமுகப்படுத்தி வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் பிரகாரம் தேவையான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளை வெளியிடுமாறு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 7(1) இன் ஏற்பாடுகளுக்கமைய கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் இலங்கை தொடர்பாக 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை 2022.03.25 அன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.