இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை அழையுங்கள். – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டை விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் மக்கள் அகிம்சை, ஆயுத ரீதியில் 70 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை நீங்கள் அழையுங்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

போரதீவு உதயதாரகை பொரு விளையாட்டரங்கைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

இலங்கையின் அரசியல் வராலாறு தற்போது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்;கா அவர்களினால் கல்லோயத் திட்டத்தின் மூலமாக குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தார். 1921ம் ஆண்டு சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திலே வெறும் நூற்றுக்கணக்கான சிங்களவர்களெ 0.3 வீதமானவர்களே வாழ்ந்தார்கள். இன்று அது 24 வீதமாக மாற்றப்பட்டிருக்கின்றதென்றால் இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசுகள் திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றியுள்ளார்கள்.

தற்போயை நிலையில் இலங்கையின் அனைத்து மக்களுமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கின்றார்கள். நாங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குள் சிக்குண்டு கடந்த 43  வருடங்களுக்கு மேலாகத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களை அடக்குவதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த காலங்களிலே அந்தச் சட்டத்தினுடாக தமிழர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், கேள்வியற்று அவர்கள் சிறைகளிலே அடைக்கப்படும் போதும் எவருமே கவலைப்படவில்லை. எந்த இனமும் கவலைப்படவில்லை. அவர்களுக்கென்று வரும்போது தான் அவர்கள் இந்தச் சட்டம் பற்றிக் கவலையுறுகின்றார்கள்.

ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் முஸ்லீம் மக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அறிந்து கொண்டார்கள். கோட்டா கோ கோம் போராட்டத்தின் பின்பு தற்போது சிங்களவர்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் சிக்கியிருக்கின்றார்கள். இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றால் என்ன என்பது தொடர்பில் தற்போது தான் இந்த நாடு வழித்திருக்கின்றது. 20, 30 வருடங்களுக்கு மேலாகவும் தற்போதும் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், வெறுமனே இரண்டு கிழமைகள் சிங்களவர்கள் அந்தத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளாக்கப்படும் போது கொதித்தெழுகின்றார்கள். எமது தமிழ் அரசியல்வாதிகளும் கூட அந்தச் சிங்கள இளைஞர்களுக்காகப் போராடுகின்றார்கள்.

தற்போது இந்த நாட்டின் பொருளாதார நிலைமையில் மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. மக்கள் மிகவும் கஸ்டமான பொருளாதாரச் சூழலிலே வாழ்ந்து கொண்;டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் இப்படியானதொரு ஆட்சியைச் செய்ய வேண்டுமா? இது போதாதென்று கடந்த பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தினால் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு ஒரு சட்டம கொண்டு வரப்படுகின்றது. ஒழுங்காக மின்சாரமே வழங்கப்படாத இந்த நாட்டில் 75 வீதம் தொடக்கம் 275 வீதம் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள். நேற்றை தினம் தொடக்கம் 75 வீதத்தால் நீர்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு அரசு அந்த நாட்டுக்குத் தேவையா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் ஜனாதிபதியாக வந்த காலத்தில் இருந்தே எடுத்த முட்டாள்தனமான முடிவுகள் இன்று இந்த நாட்டு மக்கள் அனைவரையுமே படுபாதாளத்திற்குள் தள்ளியிருக்கின்றது. கோட்டபாய இன்று நாட்டை விட்டு ஓடி, இருப்பதற்கும் இடமில்லாமல் அலைகின்றார். அவருக்குப் பதிலாக தற்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகியிருக்கின்றார். நாட்டின் விலை வாசி அதிகரிப்புக்கு ஏற்றவாறு மக்களின் வருமானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாது விட்டால் இந்த மக்கள் எங்கு செல்வார்கள்.

ராஜபக்ச சகோதரர்கள் இந்த நாட்டில் தமிழ் மக்களைக் கொன்றொழித்தார்கள். 2009 மே மாதம் ஒரு லெட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றொழித்தார்கள். அந்தப் பாவமே அந்தக் குடும்பத்தை வதைக்கின்றது. அந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் நமது புலம்பெயர் தமிழ் உறவுகளை முதலீடுகளைக் கொண்டு வருமாறும், அவர்கள் உழைத்த டொலர்களைக் கொண்டு வருமாறும் அழைக்கின்றார்கள்.

இவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதற்காகப் புலம் பெயர்ந்து சென்றார்கள். இந்த நாட்டிலே உங்களது அடக்குமுறை தாங்க முடியாமல், உங்களது கொலைப்பட்டியலில் இருந்து தப்பிச் சென்ற எம் உறவுகளை நீங்கள் அழைக்கின்றீர்கள். அவர்கள் இந்த நாட்டை விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் மக்கள் அகிம்சை, ஆயுத ரீதியில் 70 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை நீங்கள் அழையுங்கள்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டோம் புலம்பெயர் உறவுகளின் எதிர்காலச் சந்ததியினர் இந்த நாட்டிலே சுதந்திரமாக வாழலாம் நீங்கள் இங்கு வந்து முதலிடுங்கள் என்று அவர்களிடம் அழைப்பு விடலம். ஆனால், நீங்கள் அதனைச் சிந்திப்பதாக இல்லை. உங்களுக்குப் பொருளாதாரத்திற்கு மாத்திரமே அவர்கள் தேவைப்படுகின்றார்கள்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்குச் சென்றமைக்கு இந்த நாட்டின் இடம்பெற்ற யுத்தமே காரணம். இதன் காரணமாக ஆயதங்கள் உட்பட பலவும் வாங்குவதற்காகப் பல பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்தீர்கள். எதிர்காலத்திலே இந்த நாடு சுபீட்சமாக இருக்க வேண்டுமாக இருந்தால் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திவிட்டு புலம்பெயர் தமிழர்களை அழையுங்கள். அவர்கள் நிச்சயமாக இங்கு வந்து முதலிடுவார்கள். இந்த நாட்டின் கடனை அடைப்பதற்கும் அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.