தமிழர் தாயகத்தில் புதிய அரசியற் சூழல் ஒன்று தற்போது உருவாகி வருகிறது. தமிழர் நலனில் அக்கறை கொண்டு 6 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய மத்திய அரசை நோக்கி அரசியல் காய்களை நகர்த்துகின்றன. எல்லா நம்பிக்கைகளையும் இழந்து கையறு நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு இந்தப் புதிய நகர்வு எச்சரிக்கையுடனான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அரசியற் சூழலை தமிழ் அரசியலாளர்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.
“அரசியலில் நண்பர்களும் நிரந்தரமில்லை – எதிரிகளும் நிரந்தரமில்லை – நலன்களே நிரந்தரமானவை“ என்ற அரசியல் பொன்மொழியை நினைவிற் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்திய அரசை பகைமை உணர்வுடன் அணுகும் முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் ஈழத்தமிழர்கள் இன்று உள்ளனர்.
இந்தியாவின் தேசிய நலனும் – ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் பிராந்திய அரசியற் சூழல் மீண்டும் எழுந்துள்ளது
இதை சரியாகவே கணித்து, தமிழ் அரசியற் தலைமைகள் ஒன்றுகூடி இந்திய அரசை நோக்கி தமது இராஜதந்திர வியூகங்களை வகுக்க முற்படுவது வரவேற்கத்தக்கது.
எதிரிகளாக இருந்து போர்கள் புரிந்த பல நாடுகள் பின் நண்பர்களாக இணைந்து தத்தமது தேசிய நலன்களை அடைந்த வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.
அணுகுண்டு வீசி அழித்த அமெரிக்காவுடன், ஜப்பான் ஏற்படுத்திய உறவும் – நன்மைகளும்…
இரு பெரும் உலகப் போர்களில் எதிரும் புதிருமாக போரிட்ட ஜேர்மன் – பிரான்ஸ் இன்று நண்பர்களாக இருந்து பரஸ்பர நன்மைகள் பெறுவதும் இதற்கு சிறு உதாரணங்கள்.
எமது சொந்தப் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு (இராணுவ – அரசியல்) எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றுவிட சிங்கள அரசு அனுமதிக்காது என்பதை வரலாறு எமக்கு நிரூபித்துள்ளது.
எனவே எமக்கு ஒரு வெளிநாட்டின் உதவியும் தேவை. அது இந்திய அரசுதான். மாறிவரும் இன்றைய உலக ஒழுங்குகளில் அமெரிக்கா தலைமை தாங்கும் மேற்குலகமும் இந்தியாவின் பூகோளப் பங்காளியாகவே உள்ளது.
எனவே இந்திய உதவியை நாடல் என்பது சர்வதேசத்தின் உதவியையும் இணைத்துக் கொண்டு வரும் என்பதே உண்மை.
இந்திய – ஈழத்தமிழர்களுக்கு இடையே கடந்த காலத்தில் இருந்த பகைமை உணர்வால் ஏற்பட்ட காயங்கள் ஆறிவரும் சூழலில், ஆறிய புண்களை நோண்டிப் பார்ப்பது போல பழைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, புதிய அரசியல் சூழலை கெடுக்க முனைவது விவேகமல்ல.
இதை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகவியலாளர்களும் நினைவிற் கொண்டு வரலாற்றுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஊடகம் என்ற தளமும் –ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளும் இன்றைய சமூகவலையத் தளங்களால் விரிவாக்கம் பெற்றுள்ளன. இதால் அரசியல் கருத்துக்கள் அதிகளவிலும் தான்தோன்றித் தனமாகவும் வெளிப்பட்டுக் குட்டையைக் குழப்பும் சூழலும் உள்ளதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் ஆய்வுக் கட்டுரைகள் வரையும் போதும், அரசியலாளர்களை செவ்வி காணும் போதும் ஊடகவியலாளர்கள், நெறியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவது இன்றியமையாதது.
கடந்த கால தவறுகளை – முரண்பாடுகளை எதிர்மறை எண்ணங்களுடன் குத்திக் காட்டி ஆய்வு செய்வதோ! கேள்விகள் தொடுப்பதோ! சாதகமான பலன்களை தராது. புதிதாக ஏற்பட்ட அரசியல் சூழலை – இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுப்பதிலும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
Zoom meeting – Whats App கலந்துரையாடல்களுக்கு ஆட்களை அழைத்து மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் நடைமுறை இப்போது அதிகரித்துள்ளது.
இங்கே கூட்ட நெறியாளர்களின் கடமை முக்கியமானது. விதண்டாவாதமான வினாக்களை இனங்கண்டு அவற்றை புறந்தள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் நெறியாளர்கள் செயற்படுவது அவசியம். விவாதங்களைத் திசை திருப்பி குப்பையைக் கிளறும் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். இந்தப் புதிய அரசியல் சூழலை எதிர்ப்பாவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்காமல் இருந்து, அவர்களின் நச்சுக் கருத்துக்கள் அப்பாவி மக்களின் மனங்களைக் குழப்பாமல் தடுக்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் இனத்தின் நலன் என்ற போர்வையில் தமது சுயநலன்களை பழிதீர்க்கும் படலங்களை அடைந்துவிட முயலும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும். அரைகுறை அரசியல் அறிவுடனும், பிழையான தரவுகளுடனும் பொதுமகன் என்ற போர்வையில் வந்து கேள்விகள் தொடுக்கும் புல்லுருவிகளை புறம் தள்ள வேண்டும்.
ஊடகவியலாளர்கள் என்றால் நடுநிலைமையுடன் இருக்க வேண்டும் என்றொரு பலமான கருத்து உண்டு. மேம்போக்கான பார்வைக்கு இது சரியாகவே தோன்றும். ஆனால் இது பகுப்பாய்வுக்குரியது.
ஊழல் செயற்பாடுகள் – அதிகார துஸ்பிரயோகங்கள் – பெண் உரிமை – சிறுவர் மற்றும் முதியோர் நலன்கள் என்று சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் போது, நடுநிலைமை என்பது தார்மீக நிலைப்பாடாகும்.
ஆனால் தேசிய நலன் சார்ந்த அரசியலுக்கு நடுநிலைமை இல்லை. இங்கே நடுநிலைமை என்பது ஆபத்தானது. இந்த நலன் சார் அரசியலில் பக்கம் சார்ந்திருப்பதே தர்மம்.
ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் பற்றி நடுநிலையாக சிங்கள ஊடகங்கள் பேசியதுண்டா?
இரு நாட்டின் நலன் சார்ந்த அரசியலில் தேசிய ஊடகங்கள் உலகளாவிய ரீதியில் நடுநிலையுடன் கருத்துக்களை வெளிப்படுத்தியதுண்டா?
சிங்களத்தின் அரசியல் சாசனம் நடுநிலையுடன் இல்லை. நீதித்துறை நடுநிலையுடன் இல்லை. எல்லாம் பக்கம் சார்ந்துள்ளன.
புகழ்பெற்ற உலக ஊடகங்களான BBC, CNN நிறுவனங்கள் அரசியலை நடுநிலையுடன் அணுகுகின்றன என ஒருவர் நம்பினால் அவர் அரசியற் குருடராகவே உள்ளார் என்பதே உண்மை.
எல்லாமே தத்தமது அரசுகளுக்கு – இனங்களுக்கு – நலன்களுக்கு ஆதரவாக பக்கம் சார்ந்தும் முன்உரிமை கொடுத்தும் இயங்குகின்றன.
எனவே நலன் சார்ந்த அரசியலில் நடுநிலை என்பது நடைமுறையில் இல்லை என்பதே யதார்த்தம்.
ஆகவே இலங்கையின் அரசியற் சூழலில் தமிழர் நலன் சார்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது கடமையாகும்.
இன்றைய உலகில் ஊடகம் என்பது பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. பரபரப்பான செய்தி என்பது போட்டியில் முந்துவதற்காக ஊடகங்கள் பயன்படுத்தும் ஒரு தந்திரம். இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் இதைச் செய்கின்றன. அதனால் தான் அவற்றிற்கு சமூகப் பொறுப்புணர்வு இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
பொருளாதாரம் முக்கியமானது. ஆனால் இன நலனைவிட அதை முக்கியமாகப் பார்ப்பது துரோகத்தனமானது. பொருளாதார நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகள் பலர் கொழும்பைச் சார்ந்துள்ளனர். முக்கிய தருணங்களில் இத்தகைய அரசியல்வாதிகள் இன நலனை விடுத்து தமது சொந்தப் பொருண்மிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிங்கள அரசின் தமிழர் விரோத நிலைப்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இழி நிலை பலமுறை நடந்துள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளின் – குறிப்பாகத் தலைமைகளின் அரசியல் நலன்கள் மட்டுமல்ல, அவர்களின் பொருளாதார நலன்களும் தமிழர் நிலத்திலேயே மையம் கொண்டிருப்பதே தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதாகும்.
ஒரு இனம் அது அந்தஸ்துடன் இருந்தால் ஊடகங்களை தமது இனம் – நாடு சார்ந்து அரசாங்கம் நெறிப்படுத்தும்.
ஒரு இனம் பலமான அரசியல் இயக்கத்தை பெற்றிருந்தால், அந்த இயக்கம் ஊடகங்களை இன நலன் சார்ந்து நெறிப்படுத்தும்.
இப்படித்தான் புலிகள் இயக்கம் தமிழ் ஊடகங்களை தமிழர் இனநலன் சார்ந்து நெறிப்படுத்தியிருந்தது. அதனால் கருத்தியல் ரீதியாக தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு இரந்தார்கள். அதன் பலன்களையும் அடைந்தனர்.
இப்போது ஈழத்தமிழர்களுக்கு பலம் வாய்ந்த ஒரு தலைமை இல்லை. இன்று 6 தமிழ்க் கட்சிகள் ஒரு அணியில் திரண்டு நின்று இன நலன் சார்ந்து இராஜதந்திர முயற்சி எடுத்தாலும் அது இன்னும் பலமான கூட்டுத்தலைமையாக உருவாகவில்லை.
இந்த இக்கட்டான சூழலில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தான் தமிழ் இனத்தின் அரசியல் நலன் சார்ந்த கருத்து மண்டலத்தின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கின்றார்கள் என்ற வரலாற்றுப் பொறுப்பை ஊடகவியலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தனித்தொரு தலைமையின் கீழ் இவ்வாறான அரசியல் நகர்வு நடந்திருந்தால் அது ஒரு கட்டுக் கோப்புக்குள் இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் 6 தலைமைகள் இதில் பங்கெடுப்பதால், அனைத்துத் தலைவர்களும் நாவடக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம்.
இத் தலைவர்கள் கூட்டுப் பொறுப்பை மறந்து தனிப்பட்ட கருத்துக்கள் கூறுவதோ, நட்பு வட்டாரத்தில் உளறிக் கொட்டுவதோ தவிர்க்கப்பட வேண்டும். இது எதிரிகளுக்கு அவல் கிடைத்தது போலாகி விடும். கூட்டுத் தலைமை என்ற ஒற்றுமையும் தொலைந்து விடும்.
வரலாறு, மீண்டும் ஒருமுறை தமிழினத்திற்கு வழங்க முன்வந்துள்ள பொன்னான வாய்ப்பைப் பற்றிப் பிடிக்கப் போகின்றதா, அல்லது கை நழுவி விடப் போகின்றதா. காலம் பதில் சொல்லும்.
இலக்கு மின்னிதழ் 169 பிப்ரவரி 12, 2022 | Weekly Epaper 169
தமிழ் மகன்