இந்தியாவிலிருந்து ஓர் அரசியல் பிரமுகர் தொலை பேசியில் தொடர்புகொண்டு, ஆறு தமிழ் கட்சிகள் நடத்திய கூட்டம் எப்படி நடந்தது என்று கேட்டார்.
அவர் இந்தியாவிலிருந்து அழைத்ததால் அவர் இந்தியர் என்று நினைத்துவிட வேண்டாம்.
அவர் நமது அரசியல் பிரமுகர்தான். தற்போது இந்தி யாவில் நிற்பதால் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
“கூட்டம் அல்லது கருத்தரங்கு என்றால் மண்டபம் நிரம்பினால் வெற்றிதானே’’ என்றேன்.
வழக்கம்போல மாவை சேனாதிராசா இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. அவருக்கு அதைவிட முக்கியமான வேலை ஏதாவது இருந்திருக்கும் என்று அவருக்காக ‘வக்காலத்து’ வாங்கினேன்.
அவர் இடைமறித்து, “ஓமோம், உம்மட யானை இன்ன மும் அந்தக் கயிற்றை அறுத்துக்கொண்டு வரவில்லைத்தானே’’ என்றார்.
‘மாவை சேனாதிராசா ஒரு யானை போன்ற பலம் உள்ள ஒருவர். ஆனால், அவரை சிலர் கயிறு ஒன்றினால் கட்டி வைத் திருக்கிறார்கள்’ என்று முன்னர் ஒருதடவை இந்தப் பத்தியில் எழுதியதைத்தான் அவர் கேலி செய்கிறார் என்பது தெரிந்ததுதான்.
மாவை காலத்திலேயே, ஏன் அவரோடு கூடவே, அரசிய லுக்கு வந்தவர் அவர். மாவை எத்தகைய ஆளுமை உள்ளவர் என்பது குறித்து அவர் எனக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார்.
கட்சியின் தலைவராக இருந்தபோதிலும் அவர் கடந்த தேர்தலில் ஏன் வெற்றிபெறவில்லை என்பது வரை அவர் தனது கருத்துக்களை சொல்லி முடித்தபோது, மாவை பற்றிய எனது கணிப்பில் சில மாற்றங்கள் எற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மாவை அந்தக் கூட்டத்திற்கு ஏன் வரவில்லையாம் என்பதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பேச்சாளரி டம் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார், கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாராம். கூட்டம் நடந்த அன்று தான் பதின்நான்கு நாட்கள் முடிந்ததால் டாக்டரிடம் கேட்ட போது, அவர் மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு போவதைத் தவிர்ப்பது நல்லது என்று ஆலோசனை கூறியிருந்ததால் வரவில்லை. மற்றும்படி, அந்தக் கூட்டத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. இன்று இரவுகூட ‘சூம்’ வழி கலந்துரையாடல் ஒன்றில் விக்னேஸ்வரனுடன் கலந்துகொண்டேன் என்று விளக்கமளித்தாராம் மாவையர்.
கொரோனா தொற்று உறுதியானவர்கள் இப்பொது ஏழு நாட்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்பது கூட மாவையருக்கு தெரிந்திருக்கவில்லை. அதேவேளை, அந்தக் கூட்டம் நடந்த அன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் கோரிக்கை மனுவில் யாழ். பஸ் நிலையத்தில் பலர் மத்தியில் நின்று (கவனிக்கவும் சமூக இடைவெளியை கருத்தில் எடுக்காமல்) கையெழுத்திட்டார் மாவை என்ற செய்தியும் படங்களுடன் பின்னர் வெளிவந் திருந்தது.
மாவையர் பற்றி இந்தியாவிலிருந்து அந்த பிரமுகர் சொன் னவை எவ்வளவுதூரம் சரியானவை என்பதை அப்போது அறியமுடிந்தது.
கூட்டம் நடந்த அன்றுதான் அவரின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது அதற்கு முதல் வாரம். அது, பின்னர் ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டது.
அப்படியெனில், மாவையர் என்ன செய்திருக்கவேண்டும்?
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோதே தனது நிலைமையை
விளக்கிக்கூறி, கட்சியின் சார்பில் வேறு ஒருவரை அனுப்பியி
ருக்கவேண்டும். ஆகக்குறைந்தது நிலைமையை விளக்கி,
கூட்டத்தில் வாசிக்கச் சொல்லி தனக்கு தரப்பட்ட தலைப்பில்
தான் சொல்லவந்த கருத்தை எழுதியாவது அனுப்பியிருக்க
வேண்டாமா?
இப்படியெல்லாம் செய்யவேண்டும், அதுதான் தலைவ ருக்கு அழகு என்றால் – அது எல்லாம் தெரிந்திருந்தால் – கட்சியை இப்படி அதலபாதாளத்திற்கு தள்ளிவிடுகின்ற காலத்தில் தலைமையில் இருந்திருப்பாரா மாவையர் என்றும்
கேட்காமல் இருக்கமுடியவில்லை.
ஆறு கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் அடுத்த முதல மைச்சர் கனவு நனவாகும் என்பதற்காக அவர்களுடனும் நட்பில் இருக்கவேண்டும், கட்சியை ஒரு தலைவராக வழி நடத்திச் செல்ல தன்னால் மாத்திரம் முடியாது என்பதால்
கட்சியில் உள்ள மற்றவர்களும் தேவை. அவர்களையும் பகைக்கக்கூடாது என்று இரட்டைத் தோணியில் கால் வைத்துக்கொண்டு பயணித்தால், ஒரு கட்டத்தில் இரண்டு கால்களுமே இரண்டு தோணிகளிலுமிருந்து தவறிவிடும்.
கடலில் விழுந்துதான் ஆகவேண்டி வரும்.
மாவையர் எந்தக் கட்டத்திலுமே தனித்து முடிவெடுக்கின்ற ஒரு ‘தலைவராக’ இருந்ததில்லையே என்ற அந்த நண்பரின் கருத்தை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை!
ஊர்க்குருவி