பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சந்திக்குச் சந்தி மேசை வைத்து கடைவிரிக்கின்ற செய்திகள்தான் இப்போது தினமும் வந்தகொண்டிருக்கின்றன.
இந்தக் கொடிய சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று நினைக்கவில்லை.
அது நீக்கப்பட்டால் இன்று சிறையில் இருக்கும் பல கைதிகள் வெளியே வந்துவிடுவார்கள். சுமந்திரனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.
இன்று இருக்கும் ராஜபக்ஷ அரசுக்கு இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு விருப்பம் இருக்கும் என்று யாரும் நம்பப்போவதில்லை.
ஆனால், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு அனைவரும் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும், அதில் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று அனேகமாக எல்லாருமே சொன்னார்கள். சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்தச் சட்டத்தை மாற்றவேண்டும் என்ற நிலையிலேயே அன்றைய நல்லாட்சி அரசில் அங்கம்வகித்த பல்வேறு கட்சிகளும் கருத்து வெளியிட்டு வந்தன.
அப்போது, அந்தச் சந்தாப்பத்தை பயன்படுத்தி, அதனை மாற்றியமைக்கவாவது நாம் முயன்றிருக்கலாம். அதிலும், தங்களையே சட்ட மேதைகளாகவும், ஜனநாயக காவலர்களாகவும் காட்டிக்கொண்டவர்கள் பலர் அந்த ஆட்சியில் யானைப் பலத்துடன் இருந்தார்கள். அப்போதெல்லாம் அதுகுறித்து எந்த அக்கறையும் இல்லாம் இருந்தவர்கள் இப்போது எதற்காக இப்படி கிராமம் கிராமமாக போகிறார்கள் என்று இந்த ஊர்க்குருவி யோசித்துக்கொண்டிருந்தபோது, தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் தொடர்புகொண்டு அந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.
நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு தீவிரமாக உழைத்தவர்களில் அவரும் ஒருவர். அந்தக் காலத்தில் நமது சுமந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றியவர்.
இந்த ஊர்க்குருவிக்கு எழுந்த சந்தேகம்தான் அவருக்கும் வந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
அவரும் கேட்டார், நாங்கள் எல்லோரும் முற்றாக நீக்குவதற்கு தயாராக இருக்கவில்லை என்றாலும், சர்வதேச நியமங்களுக்கு அமைய அதனை மாற்றியமைக்க தயாராகத்தானே இருந்தோம், அப்போது அதனை முன்னின்று செய்திருக்கவேண்டியவர், அப்போது செய்யாமல் இருந்துவிட்டு இப்போது, அதுவும் தெற்கில் ராஜபக்ஷக்கள் அரசியல் இறங்கு முகத்தில் இருக்கும்போது, அவர் இந்த விடயத்தை கையில் எடுத்திருப்பது அவர்களுக்கல்லவா இங்கு பலம் சேர்க்கிறது என்று கேட்டார்.
இந்தச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பது நமது விருப்பம். அப்படியிருக்கையில், அதற்காக உழைக்கும் ஒருவர்பற்றி நாமும் குறைகூற முயாதல்லவா?
நான் சொன்னேன்:
“முன்னர் அவர் கனவான் அரசியல் செய்தவர். இவ்வாறு வீதியில் இறங்கியெல்லாம் தன்னால் அரசியல் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தவர். ஆனால் இப்போது அப்படியல்ல, தன்னாலும் வீதியில் இறங்கி அரசியல் செய்யலாம் என்று நினைத்து இறங்கிப் பார்த்தார். தன்னாலும் முடியும் என்று தெரிந்தபோது, இப்போது எல்லா விடயங்களையும் கையில் எடுத்துக்கொண்டு வீதிக்கு இறங்கியிருக்கிறார் போலும்’’ என்று அவருக்காக வாதிடவேண்டியதாயிற்று.
அது சரிதான், இப்போது அரசாங்கம் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்காக திருத்தச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் தாக்கல் செய்திருக்கின்றதே. அதனை வழக்கம்போல சட்ட சவாலுக்கு உட்படுத்துவதை விட்டுவிட்டு, அவர் வீதிக்கு இறங்கியிருப்பதுதான் நமக்குள் கேள்வியை உருவாக்குகின்றது என்றார் அவர்.
சுமந்திரனின் சகபாடியான ஒரு பெண் சட்டத்தரணி, இந்த புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, நீதிமன்றப் படிகளில் ஏறியிருக்கிறார். சுமந்திரன் வீதியில் இறங்கியிருக்கிறார் என்று அவருக்கு விளக்கமளித்தேன்!
அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று மேற்குலகும், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு அழுத்தம்கொடுக்கும்போது, அதனை பேசுபொருளாக்கினால் ராஜபக்ஷக்கள் தெற்கில் அரசியல் செய்ய அதுவும் உதவும் என்ற வாதமும் நிராகரிக்கக்கூடியது இல்லைத்தான்.
அதற்காக நாம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதும் நல்லதுதானே!
– ஊர்க்குருவி