இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை பிரதிஷ்டை : எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகும் தமிழர்கள்

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நாளையை நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும் குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்த நிகழ்வில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பௌத்த பிக்குகள் , தென்பகுதி மக்கள் இராணுவம் பொலிஸ் விமானப்படை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது .