இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் திருமதி அக்தரிடம் தெரிவிக்கப்பட்டன.
அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.
இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், பிரதி உதவிச் செயலாளர் அக்தர், இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் இ.சொனெக், தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.