மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. அதை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறு தமிழ்க்கட்சிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டைப் பொறுப்பேற்றிருக்கும் கோட்டாபய மற்றும் அவரது சகாக்ககள் குறிப்பாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இவர்கள் கூறுவது இலங்கைத் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை இல்லை. இவர்களுக்கு உள்ளது பொருளாதா ரீதியான பிரச்சனையே என்று. பொருளாதாரப் பிரச்சனைக்காகவா இத்தனை வருடங்கள் இத்தனை உயிர்களை, பொருளாதாரத்தை, கலை, கலாச்சாரத்தை, பிரதேசங்களை பறிகொடுத்து வந்திருக்கின்றார்கள் எமது மக்கள்.
கோட்டபாய அவர்கள் வரும்போது திடீரென வானத்தில் இருந்து அல்லது சந்திரமண்டலத்தில் இருந்து குதித்து வந்தாரா என்றே கேட்கத் தோணுகின்றது. ஏனெனில் இலங்கை சுதந்திரமடைந்து தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாகத் தான் சமஸ்டிக் கட்சி தமிழரசுக் கட்சி உருவாகி அகிம்சைப் போராட்டம் நடந்தது, அதற்கும் மேலாக இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சனைன இருக்கிறது என்று உணர்ந்த காரணத்தினால் தான் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், 1982ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், 1984ம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சந்திரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியங்கள், ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இன்னும் பல வெளிநாடுகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் இங்கு கொண்டு வரப்பட்டது, அவை நிறைவேற்றப்படாமல் போனதெல்லாம் எதற்காக?
தமிழரசுக் கட்சி உருவாகி எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியில் பல போராட்டங்களை நடத்தி அடி உதை வாங்கி தமிழர்களுக்கான தீர்வு பிரிந்து செல்வதற்கான தீர்வு என்பதைத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாக பல சகாப்தமாக கீரியும், பாம்புமாக இருந்து ஒன்றாகிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தொண்டமான் போன்றவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். இது ஐக்கியத்தின் உறுதிப்பாடு.
இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலே தமிழ் மக்கள் உறுதியாக ஐக்கியப்பட்டார்கள். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கிலே ஒரே ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து கொடுத்தார்கள்.
இதனைப் பார்த்துப் பயந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு அதிகாரமற்ற அதிகாரப் பகிர்வு என்ற ரீதியல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கினார். அதன் மூலமாக எங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக எங்களது குரல் ஓங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 1983ம்ஆண்டு பாரிய இனக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அகிம்சைப் போராட்டத்தில் வெறுப்படைந்து ஆயுதம்தான் முடிவு என்று போராட்ட இயக்கங்கள் உதித்துக் கொண்டிருந்த நேரம் ஏற்பட்ட இனக்கலவரமும் இந்தப் போராட்ட இயக்கங்களை விஸ்வரூபம் எடுக்க வைத்தது.
அந்த நேரத்திலே இந்;தியா எமக்கு உதவி செய்தது. ஆயுதப் போராட்டம் ஓங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு பேச்சுவாhத்தை. திம்புப் பேச்சுவார்த்தை திம்புப் பேச்சுவார்த்தையிலும் ஐந்து முன்னணிப் போராட்ட இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். உறுதியான ஐக்கியமொன்று கட்டியெழுப்பட்டது. அந்த ஐக்கியம் குழப்பப்பட வேண்டும் என்று சர்வதேசம் கங்கணம் கட்டியது. நாங்கள் உறுதியாக, ஐக்கியமாக இருந்திருக்கின்றோம். ஆனால் துரதிஸ்டவசமாக எமது ஐக்கியத்தைக் குழப்ப வேண்டும் என்ற சர்வதேசச் சதியினூடாக எமது ஐக்கியம் குழப்பப்பட்டது. தமிழர்கள் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டார்கள். மீண்டும் அந்த ஐக்கியம் 2001லே மலர்ந்தது. கடந்த கால கசப்பான சம்பவங்களை நாங்கள் நினைத்துக் கொண்டு ஒருநாள் புதைகுழிகளைத் தான் தோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அந்;தக் கசப்பான அனுபவங்கைளயெல்லாம் மறந்து 2001லே தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த மிதவாதக் கட்சிகளும், போராட்டக் கட்சிகளும் உறுதியான ஐக்கியத்துக்குள் கொண்டு வரப்பட்டன.
பின்னர் 2009 மே 18 வரை உறுதியாக ஐக்கியமாகத் தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த கட்சிகள் இன்று அந்த ஐக்கியத்தை இழந்து நிற்கின்றோம். இன்று 2009க்கு முன்னர் இருந்த நிலையை விட வடக்கு கிழக்கிலே மிக மோசமான நிலையிலே இருக்கின்றோம். எனவே அந்த ஐக்கியம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு இன்று வடக்கு கிழக்கிலே எமது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மொழி உரிமை முற்றுமுழுதாக மீறப்பட்டிருக்கின்றது. உதாரணமாக அண்மையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். எமது வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. கும்பிடுவதற்குப் புத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் புத்தர் சிலை உருவெடுக்கின்றன. எங்கெங்கெல்லாம் உயர்ந்த மலைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் புத்தர் வந்து உட்காரும் ஒரு நிலைதான் தற்போது வடக்கு கிழக்கில் இருக்கின்றது. நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது.
அண்மையில் அமைச்சர் நாமல் அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மக்கள்; விடுதலை முன்னணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று. ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி தங்கள் தலைவரையும் மறைந்த உறுப்பினர்களையும் நினைவு கூருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால வடக்கு கிழக்கிலே பொதுமக்களைக் கூட நாங்கள் நினைவு கூர முடியாத ஒரு நிலையிலே இருக்கின்றோம்.
ஒரு நாடு ஒரு சட்டத்தின் மூலம் மாகாண சபைகளைக் கூட அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. மாகாணசபைகள் இருந்தால் அவற்றுக்கான நியதிச் சட்டங்களை அவர்களே உருவாக்கும் நிலை இருக்கின்றது. அப்படியாயின் ஒரு நாடு ஒரு சட்டம் அங்கு தோற்றுப் போகும். இந்த நிலையில் நாங்கள் ஐக்கியப்பட வேண்டும்.
எமது மறைந்த தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்கள் முன்னர் ஒரு தடவை குறிப்பிடுகையில், இலங்கையின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்று சொன்னார். இன்று அது யதார்த்தமாகவும், நிதர்சனமாகவும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் இன்று தேர்தல் அரசியலுக்காக பிரிந்து நிற்கின்றோம்.
இன்று ஆறு கட்சிகளின் கூட்டம் நடைபெறுகின்றது. ஆனால் ஐந்து கட்சிகள் தான் இன்று மேடையில் இருக்கின்றன. ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அழுல்ப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது மாகாணசபைகள் தொடர்பில் அமுல்ப்படுத்தப்பட்ட சரத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடிதம் வரைந்துள்ளோம். ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எங்களுக்கு இறுதித் தீர்வு என்று ஒரு போதும் நாங்கள் சொல்லவில்லை.
நாங்கள் தனி ஈழத்திற்காகப் போராடியவர்கள். புலிகள் தமிழீழத்திற்காகப் போராடவில்லை தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதற்காகப் போராடியவர்கள் என்று சொல்கிறார் கஜேந்திரன் அவர்கள். புலிகளின் வாசகமே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதுதான் அதுகூட அவருக்குத் தெரியாமல் இருக்கின்றது.
ஆனால் நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முற்றமுழுதாக அமுல்ப்படுத்தக் கோருவது தற்போது இருக்கும் எமது பிரதேசத்தையாவது நாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 2009 வரை தமிழீழம் தான் எமது இலக்கு, தமிழீழத்தை அடைய வேண்டும் என்பதற்காக அதற்கு முன் வந்த எத்தனையோ சந்தர்ப்பங்களை நாங்கள் தவறவிட்டிருக்கின்றோம். அவையெல்லாம் எமது கடந்த கால அனுபவங்கள்.
எங்களை நாங்களே ஆழ வேண்டும், சுயநிர்ணய உரிமையுடன் நாங்கள் வாழவேண்டும், எமது பிரதேசஙம் எங்களுக்குத் தேவை என்பது எமது இறுதி இலக்கு. ஆனால் அதுவரை எமது இருப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள். அங்கு தமிழர்களின் குடிப்பரம்பல் குறைக்கப்படுகின்றது. கிழக்கு மகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மாகாணசபைகளுக்கு பெரும்பான்மையாக சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது மட்டக்களப்பில் மாத்திரமே சிங்களப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாத நிலை இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இருபதாயிரத்திற்கு மேல் சிங்கள வாக்காளர்களை அங்கு கொண்டு வருவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் வழிகாட்டலில் எல்லைப் புறங்களில் மர முந்திரிகை என்றும், சேனைப்பயிர்ச் செய்கை என்றும் எங்களது பண்ணையாளர்களின் மேய்ச்சற் தரைகள் கபளீகரம் செய்யப்படுகின்றன.
எனவே இவற்;றைத் தடுப்பதாக இருந்தால் மாகாணசபை உருவாக்கப்படும் போது இருந்த காணி அதிகாரங்கள் முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் போதே நாங்கள் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இவற்றைக் கருத்திற்கொண்டு நாங்கள் ஓரணியில் சேரும் போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 13வது திருத்தத்தைச் சவப் பெட்டிக்குள் வைத்துத் தூக்குகின்றார்கள்
இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் ஒற்றுமைப்படாவிட்டால் எதிர்காலத்தில் எங்கள் இருப்பு என்னவாகும் என்பதை இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகும் போது இவர்கள் சிறுவர்கள். இவர்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றவும் இல்லை, உத்வேகம் கொடுக்கவும் இல்லை. தற்போது கஜேந்திரகுமார் சொல்லுகின்றார் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆயுதப் போராட்த்தைக் கொச்சைப்படுத்துவதென்று.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அதனுடாக ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்கள் எங்களுக்குப் போதாது என்று தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கடிதம் எழுதியது. நாங்கள் ராஜீவ் காந்தி அவர்களை நேரடியாகவும் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. நாங்கள் அதை அடைவதற்கு ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்று தெரிவித்தார்.