இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்டாக் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த உயர்ஸ்தானிகர் முதலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு காணொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் விவசாயம் கல்வி கடற்றொழில் போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் தூதருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.