இலங்கை மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயான அரசியல் ஆலோசனைகளின் முதலாவது அமர்வு ஒக்டோபர் 21 மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், அரசியல் ஆலோசனைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2009 இல் கைச்சாத்திடப்பட்டது.
தற்போதுள்ள உறவுகளை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளில் மேலும் மேம்படுத்துவது குறித்து பிரதிநிதிகள் ஆலோசித்தனர். இச்சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, மனிதவளம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, சுகாதாரம், விவசாயம், திறன் அபிவிருத்தி மற்றும் பரஸ்பர நலனுக்கான தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
மேலும், புதிய இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இத்தகைய ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் இந்த சந்திப்பின் போது முன்மொழியப்பட்டது.
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்புக்கள் மற்றும் பஹ்ரைனில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் இலவச தடுப்பூசி குறித்த அர்ப்பணிப்பு குறித்து பஹ்ரைன் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். வெளிநாட்டிலுள்ள இலங்கையகளுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் வசதிகளை வழங்கிய பஹ்ரைன் அரசாங்கத்துக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்த பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, திறமையான மற்றும் அரைத் திறன் கொண்ட இலங்கையர்களுக்கான பஹ்ரைனில் உள்ள தொழில் வாய்ப்புக்களை ஆராய்வதற்கு இலங்கை தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியதுடன், பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சின் துணைச் செயலாளர் (அரசியல் விவகாரங்கள்) கலாநிதி. ஷேக் அப்துல்லா பின் அஹமத் அலி கலீபா பஹ்ரைன் தரப்பினருக்குத் தலைமை தாங்கினார்.
புது டில்லியில் வதியும் இலங்கைக்கான பஹ்ரைன் இராச்சியத்தின் தூதுவர் மாண்புமிகு அப்துல்ரஹ்மான் முகமது அல்-கவுத், ஆபிரிக்க ஆசிய விவகாரங்கள் திணைக்களத் தலைவர் மாண்புமிகு தூதுவர் பாத்திமா அப்துல்லா அல்-டான், ஆபிரிக்க ஆசிய விவகாரங்கள் திணைக்களத் தலைவர் ஃபஹத் முஹமத் அல்-ஃபைஹானி, ஆபிரிக்க ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் முதல் செயலாளர் மற்றும் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் பஹ்ரைன் பிரதிநிதிகளில் அடங்கியதுடன், வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளில் உள்ளடங்கினர்.
இலங்கை மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றுக்கு இடையேயான அரசியல் ஆலோசனையின் இரண்டாவது அமர்வு 2022 இல் இலங்கையின் கொழும்பில் நடைபெறும்.