தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கட்சிகள் ஒவ்வொன்றும் தனியாக ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியமை தொடர்பாக வல்வெட்டித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை ஜெனிவாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணி,தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகள் கூட்டாக தமிழர் பிரச்சினையை தீர்க்க வடக்கு கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் பொதுசன வாக்கெடுப்பு தேவை என்ற விடயத்தை வலியுறுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் தனியாக ஜெனிவாவுக்கு கடிதத்தினை அனுப்பியுள்ளோம். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்குமானால் ஜெனீவாவுக்கு பல்வேறு கடிதங்கள் போக வேண்டிய தேவையிருக்காது.
இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ஒற்றையாட்சியை விட்டு ஒரு அங்குலமும் அரசாங்கம் வழங்காது. அரசியல் தீர்வு வழங்கப்படும் ஆனால் கூட ஒற்றையாட்சியை மலினப்படுத்துவதாக அந்த தீர்வு இருக்காது.
சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே அரசியல் தீர்வுக்கான வழி என்பதை நாங்கள் இறுக்கமாக வலியுறுத்தி இருக்கின்றோம் என்றார்.