”இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவும்”

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.

இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் டேவிட் ஹோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினை குறித்து அவுஸ்திரேலியா நன்கு அறிந்துள்ளதா‌க அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நாடொன்று இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளில் அதிகூடிய தொகையை அந்நாட்டினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் ஏனைய துறைகளுக்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.