ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என, இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்காமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது கூட, ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறையுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளமையை பா.ஜ.க அரசு மறந்து செயற்படுவதாகவும், மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இலங்கைத் தமிழர்களை அவமதித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.