முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தெளிவான கொள்கை கட்டமைப்பை இலங்கை வகுக்க வேண்டும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராவதாக, அண்மைக் காலமாக பல ஊடக அறிக்கைகள் தவறான செய்திகளை வௌியிட்டிருந்ததாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.