இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கியமைக்கு பிரித்தானிய எம்.பி அதிருப்தி

பிரித்தானியா இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கியது மிகுந்த மனவேதனையை தருகின்றது என பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவர் எட்வேட் டேவி (Rt. Hon. Sir Ed Davey MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கும் அதன் அனைத்துலக வர்த்தகக் கொள்கைக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் கூட்டு விசாரணையொன்றை ஆரம்பிக்கக்கோரி பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவாரான எட்வேட் டேவி கடிதம் ஒன்றை கடந்த 9ம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவையின் வெளிவிகாரத் தெரிவுக்குழுத் தலைவர், அலிசியா கார்ன்ஸ் (Alicia Kearns MP, Chair of the Foreign Affairs Commons Select Committee) அதன் அனைத்துலக வர்த்தக தெரிவுக்குழுத் தலைவர் அங்னஸ் மைக்நீல் (Angus MacNeil MP, Chair, International Trade Commons Select Committee)ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப்பபட்டுள்ள அக்கடிதத்தில், பிரித்தானியா நீண்டகாலமாகவே உலகில் மனித உரிமைகளைப் பாதுகாத்து வந்துள்ளது. அதற்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது.

அதனால் உலகளவில் மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாப்பதில் எமது வெளிவிவகாரக் கொள்கைளும் அனைத்துலக வர்த்தகக்கொள்ளையும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பில் எங்கள் நாடு கடைப்பிடித்துவரும் கொள்கைகள் தொடர்பில் தனது தொகுதியில் வாழும் மக்கள் கவலையடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எட்வேட் டேவி வர்த்தக அமைச்சராக இருந்த 2010-2012 காலப்பகுதியில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு வரிச்சலுகை வழங்காதிருப்பதை தான் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

துரதிஸ்டவசமாக 2015-2016 இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரித்தானியாவும் இலங்கையும் இவ்வரிச்சலுகையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யா, சீனா தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் எழுந்துள்ள விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரித்தானியாவில் வெளிவிவகாரக் கொள்கையும் அதன் அனைத்துலக வர்த்தகக்கொள்கையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியா அரசாங்கம் நீண்டகாலமாகவே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக தனது கரிசனையினைத் தெரிவித்து வந்தது. இருந்தபோதிலும் இன்று அந்நாட்டிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.