இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து மேலும் நிவாரணப் பொதிகள்!

தமிழக அரசாங்கத்தினால் 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான உதவி, இந்திய உயர்ஸ்தானிகரினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அதனை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள், மூன்றாவது கட்டமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இதுவரையில், 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்துகள் என மொத்தமாக சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.