சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை இலங்கை வழங்க பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது.
பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, கடன் மறுசீரமைப்பில் “விரைவில்” தமது ஆதரவை பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் இலங்கை, கடந்த செப்டம்பரில் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
எனினும், இந்த நிதி திட்டத்தை பெருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ஒப்புதல் பெறுவது அவசியம்.
அந்த ஒப்புதலை பெற, முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் கிளப்பின் உறுப்பினர் அல்லாத சீனாவும் இந்தியாவும், இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்களில் முன்னணியில் உள்ளனர்.
எவ்வாறாயினும், அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு முன்வந்த இந்தியா, அதற்கான நிதியியல் உத்தரவாதங்களை அளித்தது.
மேலும் சீனாவின் எக்ஸிம் வங்கி கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில், இரண்டு வருட கடன் ரத்து கால அவகாசத்தை வழங்கியது.
சீனாவின் இந்த உறுதிமொழிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், பெய்ஜிங் போதுமானதைச் செய்யவில்லை என்று கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
“சீனா இதுவரை வழங்கியது உத்தரவாதம் போதாது. அவர்கள் IMF கடன் நிவாரணத்தை பெற நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியத்தின் மிகப்பெரிய அங்கத்தவர்களின் ஒருவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.