பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் நிலையில், கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் பேரவை, இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழ் அமெரிக்கர் ஒன்றியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய அமெரிக்க தமிழ் செயற்பாட்டுக்குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவிற்கு கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகமோசமடைந்துவரும் நிலையில், அதனை சீரமைப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்துகொள்ளமுடிந்தது.
தற்போதைய பொருளாதாரநிலையின் காரணமாக இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகளை நாம் உணர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, இதுகுறித்து எமது கரிசனையையும் வெளியிடுகின்றோம்.
எவ்வாறிருப்பினும் இலங்கைக்கு எவ்வித நிபந்தனைகளுமற்ற உதவிகளை வழங்குவதன் மூலம் தற்போது மக்கள் அனுபவித்துவரும் துன்பத்தை நீக்கமுடியாது என்றே நாம் கருதுகின்றோம்.
அதுமாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதக்கொள்கைகளால் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இது பங்களிப்புச்செய்யாது.
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலித்து வந்திருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அவை கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களிலும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது.
குறிப்பாக இலங்கை தொடர்பில் ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது சுமார் 40,000 பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தரப்பினரால் மதிப்பிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டில் சார்லஸ் பெட்ரியினால் தலைமைதாங்கப்பட்ட ஐ.நா உள்ளகக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில், இறுதிக்கட்டப்போரின்பேர்து சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நேர்ந்தது என மதிப்பிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் இடம்பெற்றிருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் உரியவாறான விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் 30/1 தீர்மானம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டது. தற்போதுவரை இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுடனும் மனித உரிமை மீறல்களுடனும் தொடர்புடைய ஒருவர்கூட கைதுசெய்யப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.
பல்வேறு கட்டமைப்புக்களிலும் நிலவும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு அதற்குக் காரணம் என்பதுடன் அது சிங்கள, பௌத்த மத அடிப்படைவாதம் எழுச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது.
எனவே பொருளாதாரமீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் உதவிகள் வழங்கப்படும்பட்சத்தில், தாமாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்களின் பூர்வீக, பாரம்பரியக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.
அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒக்லான்ட் நிலையத்தினால் ‘என்ட்லஸ் வோர்’ என்ற தலைப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வலுகட்டாயமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அவற்றினூடாக தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாசார அடையாளங்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் நீங்கள் (சர்வதேச நாணய நிதியம்) இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கவேண்டும்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்தும் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே சர்வதேச நாணய நிதியம் போன்ற கட்டமைப்புக்கள் இலங்கைக்குக் கடன்வழங்கும்போது நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாகவே பொறுப்புக்கூறலை நோக்கிய நகர்வுகளை வலுப்படுத்தமுடியும்.
அதேபோன்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் மிகவும் மோசமான சட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டதும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பிலும் உங்களது கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளைச் செய்திருந்தாலும், சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கு அத்திருத்தங்கள் குறைந்தளவான பங்களிப்பையே வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனவே கடனுதவிகளை வழங்குவதெனின், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும் நிபந்தனை விதியுங்கள் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.