இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடிய போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகளை செய்வதற்கு அனுமதிக்குமாறு இதன்போது மு.க..ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதரார நெருக்கடி நிலைகாரணமாக இலங்கையில் வாழமுடியாது படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகளை செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியதோடு தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.