இலங்கைத் தீவில் தமிழரின் எதிர்பார்ப்பு ஆட்சி மாற்றம் இல்லை அரசியல் தீர்வே! ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்டு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதல்ல நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதே ஆகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு தமக்கு சாதகமாக கையாள ஒன்றிணைந்து தீர்வுக்கான உறுதியான நிலைப்பாட்டை தயார்ப்படுத்தி இராஐதந்திர காய் நகர்த்தல்களை மேற் கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்டு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதல்ல நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதே ஆகும். 1948 ஆண்டில் இருந்து 2019 வரை ஆட்சியில் ஆட்களை மாற்றியதை தவிர ஆட்சியின் நிகழ்ச்சி நிரலை மாற்ற முடியவில்லை என்பது தமிழர்களுக்கு பாரிய ஏமாற்றமாகும்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளரின் வெளிநாட்டுக் கொள்கை கடந்தகால ஆட்சியாளர்களின் நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதால் இந்திய மேற்குலக நாடுகளின் தொடர் அழுத்தங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இது தொடரும் இதனை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு சாதகமாக கையாள வேண்டும். தற்போதைய ஆட்சியாரின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையும் ஆளும் கட்சியில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானோர் புதிய முகங்களாக உள்ளமையாலும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் மாற்றத்தை எதிர்க்கட்சியால் ஏற்படுத்த முடியாது.

தற்போதைய கோட்டாபய ஆட்சி 2025 வரை தொடரும் போது ஏற்பட இருக்கும் சர்வதேச பூகோள இராஐதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு களம் இறங்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் அல்ல தங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வே.