இலங்கையின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 7.8% சுருங்கியுள்ளது என்று சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 12.4% சுருங்கியுள்ளதாக குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உற்பத்திக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த பெப்ரவரியில் 42.3 சுட்டெண் மதிப்பைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 3 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்வுகூறியுள்ள மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, 2024 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாகம் என்பன கடந்த ஆண்டு தொடக்கத்தில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பு திட்டத்திற்கு எதிர்வரும் 20 அன்று இறுதி செய்யப்படும் என இலங்கை காத்திருக்கிறது.
இந்த ஆண்டு முழுவதும், எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளுடன், மத்திய வங்கி நாணயத்தை வலுப்படுத்தவும், இறுதியில் வட்டி வீதங்களைக் குறைக்கவும், பணவீக்கத்தை தொடர்ந்து குறைக்கவும் முடியுமென ஆசிய செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வுபிரிவு சிரேஷ்ட உப தலைவர் சஞ்சீவ பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.