தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும் காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது? கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம்.
வீடாக இருந்தால் என்ன நாடாக இருந்தால் என்ன கடனில் மூழ்கிருப்போர் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் திறமையான இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அடிப்படை பொருளாதார உபாயத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவதே வீட்டையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்குரிய ஒரே உபாயம் ஆகும்.
Janes இணையத்தள அறிக்கையின்படி இலங்கையின் பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடுகள் 2022 இல் 2021 இல் இருந்ததைவிட 14% இனால் 373 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. நாட்டை பாதுகாப்பதே ஆயுதப்படையினரின் ஒரே கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால் இதை விடுத்து போர் நடக்காத சூழ்நிலையில் சந்திக்கு சந்தி ஆயுதப்படையினரின் சோதனைச்சாவடிகள் போதாதென்று இப்போது பெற்றோல் நிலையங்களில் ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு ஆயுதப்படையினர் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க செலவில் சதுரங்கம் உட்பட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கிறார்கள்.
இதுவா நாட்டில் செலவீனங்களை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் உபாயம் ? பொருளாதார பிரச்சினைகளில் நாடு மூழ்கி இருக்கும் போது தென் பகுதி தலைவர்கள் வடக்குக்கு வந்து எதாவது நிவாரணம் வழங்குகிறார்களா? வழமை போல தமது பேரினவாத வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களிலும் பௌத்த விகாரைகளை நிறுவுகிறார்கள். தமிழர் அல்லாத குடியேற்றப்பட்டவர்களுக்கு காணி உறுதி வழங்குகிறார்கள்.
வட்டிக்கு வெளிநாட்டுக் கடன் எடுத்து ரோலிங் மூலமாக நாட்டை நிமிர்த்தலாமா ? முதலில் சீனாவிடம் கடன், பிறகு வங்காள தேசத்திடம் கடன் இப்போது இந்தியாவிடம் கடன். சீனாவும் இந்தியாவும் கடன் கொடுக்கும் போர்வையில் சத்தம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் நாட்டின் பல இடங்களையும் வளங்களையும் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். இதை தட்டிக் கேட்கமுடியாத ஒரு கையாலாகாத எதிர்க்கட்சி தலைவர்.
நாள்தோறும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது . இந்த மாதம் 18ம் திகதியில் மாத்திரம் 55.95 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் இந்த மாதத்தில் மாத்திரம் 18ம் திகதி வரையில் 172.34 பில்லியன்கள் அச்சடிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (2).
இந்த சூழ்நிலையில் பல இடங்களில் மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டு வரிசைகளில் நின்று கொண்டிருக்கும் நிலையில் சிலர் வீழ்ந்து இறப்பதனால் மக்களின் வெறுப்பை மிகவும் கடுமையாக சந்தித்துள்ள நிலையில் கூட்டப்பட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு தமிழ் தலைவர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ் கட்சிகளின் நிலையோ அந்தோ பரிதாபம்! அரசுத் தலைவரை சந்திக்க தனியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று அழுது கொண்டு இந்தக் கூட்டத்துக்கு செல்லுகிறார்கள்.
இதன்மூலம் இவர்கள் சாதிக்கப் போவது என்ன ? இவர்கள் சொல்லி பணம் அடிப்பதை நிறுத்தப் போகிறார்களா? அல்லது கடன் ரோலிங் ஐ விட்டுவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பாதுகாப்பு உட்பட அனைத்து துறைகளிலும் வீண் செலவீனங்களை குறைக்கப் போகிறார்களா? குறைந்த பட்சம் இத்தகைய கூட்டங்களுக்கு முன்நிபந்தனைகள் எதுவுமின்றி செல்வதை தவிர்ப்பதன் மூலம் தமிழர்களின் தன்மானத்தையாவது காப்பாற்றுவார்களா ?
Dr முரளி வல்லிபுரநாதன்