இலங்கையின் கடன் நெருக்கடிநிலைக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி செயற்படத்தயாராக இருப்பதாக ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பெங்களூர் நகரில் கடந்த 24 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவுதல், அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டின் பெறுபேறு குறித்த ஆவணம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்டது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குரிய தீர்வை அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றுக்கொடுப்பதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கூட்டாக இணைந்து பல்தரப்பு ஒருங்கிணைவை வலுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன் இரத்திற்கு அப்பால் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கான பொதுச்செயற்திட்டத்தை உருவாக்கல்’ என்ற அடிப்படையின்கீழ் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று அந்தப் பொதுச்செயற்திட்டத்தை உரியவாறான காலப்பகுதியில், முன்னெதிர்வுகூறக்கூடிய அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்தவேண்டும்’ என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.