இலங்கை அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மீட்டெழமுடியாத வகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.
குறிப்பாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறுமையாகிவிட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமாகின்றபோது 70.2 சதவீதத்தினைத் தொட்டு விட்டது.
இதனால் உள்நாட்டில், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பொருட்களின் விலைகளும் உச்சத்தினைத் தொட்டுள்ளன. இதனால் நாட்டில் 70 சதவீதமானவர்கள் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அதிகமானவர்கள் இருவேளை உணவையே உட்கொள்வதாகவும், கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் பாரிய நெருக்கடிகளை தவிர்க்கும் முகமாகவும், பொதுமக்களின் பட்டினி வாழ்க்கையை தடுக்கும் முகமாகவம் இந்தியா உடனடியாக அத்தியாவசிய உதவிகளை வழங்கியதோடு 4 பில்லியன் டொலர்கள் கடன்களை எந்த நிபந்தனைகளும் இன்றி வழங்கியுள்ளது.
இதனால், இலங்கை ஓரளவுக்கு நிம்மதிப்பெருமூச்சுவிடக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இந்தியா, சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சவார்த்தைகளின்போது பிரசன்னமாகி இலங்கைக்கான சாட்சியாளராகவும் செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, இம்முறை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் இலங்கையின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதோடு அதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா.உயர்ஸ்தானிகர் பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
இதன்மூலம் இலங்கை கடன் பொறிக்குள் சிக்குண்ட நாடாகவும், கடனிலிருந்து வெளிவர முடியாத நாடாகவும், சர்வதேச ஆதரவு தேவை என்ற விடயமும் வெளிப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளில் பிரதான நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கும் கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
குறிப்பாக, அமெரிக்கா, உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியாவும், ஜப்பானும் திறந்த மனதுடன் கடன்மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளன.
ஆனால் சீனா தனது பகிரங்க அறிவிப்பைச் செய்தவற்கு தயாராக இல்லை. இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாக இருந்தால் முதலில் கடன் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டியுள்ளது.
ஏனென்றால், ஏற்கனவே இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாது என்று அறிவித்துவிட்டது. இதனால் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் கடன்களையோ உதவிகளையோ செய்வதற்கு தயாராக இல்லை.
ஆகவே, இலங்கை கடன் மறுசீரமைப்பைச் செய்வது மிகவும் அத்தியாவசியமானதொரு செயற்பாடாக அமைகின்றது. கடன் மறுசீரமைப்பு என்பது கடன் கொடுக்கப்பட வேண்டிய காலம், அதற்கான வட்டி, திருப்பி செலுத்த வேண்டிய தொகைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.
இதுவொரு சாத்தியமான செயற்பாடாகும். இந்த சாத்தியமான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பச்சைக்கொடியை காண்பித்துள்ளதோடு ஆரம்பகட்டப் பேச்சுக்களையும் மேற்கொண்டுள்ளன.
ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளது. ஏனென்றால், சீனா இலங்கையை நெருக்கடியான நிலைமைகளை உணர்ந்து அதனைப்பயன்படுத்தி தனது ‘கடன்பொறி’ இராஜதந்திரத்தினை நடைமுறைப்படுத்தவே முயல்கின்றது.
இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று கூறிக்கொள்ளும் சீனா, தான் வழங்கிய கடன்களை எவ்வாறு மீளப்பெறலாம் என்பது பற்றியே அதிகளவில் கரிசனை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்தக் கடன்களை மீளப்பெறுவதற்காக புதிய வட்டி வீதத்தில் மேலதிகமாக புதிய கடன்களை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இதனால் தான் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நிறைவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்னமும் சீனா எந்தவிதமான நிதி நன்கொடைகளை வழங்காது அமைதியாக இருந்து வருகின்றது.
மாறாக, சீனாவின் உரத்தினை நிராகரித்தமைக்கான சீனா இலங்கையின் நெருக்கடிகளையும் நன்கு அறிந்திருந்தும் 6.9 மில்லியன்களை இழப்பீடாக பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது எரிகிற வீட்டில் பிடுகியது இலாபம் என்ற மனோநிலையாகும்.
இவ்வாறான நிலையில் தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் முடிவினையே சர்வதேச தரப்புக்கள் எதிர்பார்த்துள்ளன.
குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, யப்பான் உள்ளிட்ட நாடுகளும், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணயநிதியம், பாரீஸ்கிளப் உள்ளிட்டவையும் சீனாவின் அறிவிப்பையே எதிர்பார்த்துள்ளன.
ஏனென்றால், இந்தத் தரப்புக்கள் தாம் இலங்கையின் நெருக்கடிக்காக வழங்கும் உதவி நிதியை சீனா தனது கடன்களுக்காக பெற்றுக்கொண்டுவிடும் என்ற அச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. இதுவொரு இயல்பான அச்சம் தான்.
சீனா, தான் இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தொடர்பில் மௌனமாக இருக்கும் வரையில் சர்வதேச நாடுகளும், நிதி நிறுவனங்களும் இவ்விதமான அச்சத்தினை கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது.
இவ்வாறான நிலையில்தான் தற்போது கடன்மறுசீரமைப்பு தொடர்பிலான பேச்சக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையிலும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேரசிங்கவும் முன்னெடுத்த வண்ணமுள்ளனர்.
இருப்பினும், இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயற்பாடும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளுவதாற்கான சந்தர்ப்பங்களும் சீனாவின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
சீனா இதனைப்பயன்படுத்தி இலங்கையை தனது நலன்களுக்காக கையாளப்பார்க்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
சீனாவின் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படாமையால் தான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த உச்சிமாநாட்டிற்கு இணைத்தலைமை வகிப்பது குறித்து இலங்கையுடன் எந்த இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் ஜப்பான் உள்ளது.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரங்களில் நேரடி தொடர்பை கொண்டுள்ள ஜப்பான் அதிகாரியொருவர் இதனை ரொய்ட்டர் செய்தி சேவைக்கு அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.