வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகைகளை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இம்மாதம் 18 ஆம் திகதியுடன் சலுகைக்காலம் முடிவடையும் சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.
வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது.
இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்படவேண்டிய வெளிநாட்டுப்பிணையங்களுக்கான கொடுப்பனவு மீளச்செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளளது.
அதேவேளை நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மற்றுமொரு பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி மீளச்செலுத்துவேண்டிய சர்வதேச பிணையங்களுக்கான சலுகைக்காலம் இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவிற்கு வந்திருக்கும் நிலையில், அதற்குரிய கொடுப்பனவைச்செய்யத் தவறியிருப்பதன் காரணமாக இலங்கை முதன்முறையாக அதன் சர்வதேச பிணையங்களைச் மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமான செயற்திட்டத்துடன் இணைந்ததாக வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அறிவித்தைத்தொடர்ந்து, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.