இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டு பங்காளிகளின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் அதன் உள்நாட்டு சந்தையின் நிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் இலங்கைக்கு சீனா அழைப்பு விடுக்கிறது என அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில் இருந்து அதே கவனத்தைப் பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஜாவோ, ஒரு நல்ல அண்டை நாடு என்ற வகையில், சீனா இலங்கை மக்களுக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.9 மில்லியன் டாலர்) மனிதாபிமான உதவி உட்பட பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளுடனும் நல்ல அண்டை நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்பதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியின் நேர்மறையான போக்கைப் பேணவும் மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.