இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயார்: பிரித்தானியா, கனடா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் பிரெய்த்வெய்ட் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் ஆதரவு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னே அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கின்றார்:

‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கனடா தயாராக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.