இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களைக் கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அவதானமாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது எனவும், பிரிட்டனின் அணுகுமுறைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தூதுவர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம், பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹ்மட் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, கொரோனாத் தொற்றால் உயிரிழந்த மதக் குழுக்களின் உடல்களைக் கட்டாய எரிப்புக்கு உட்படுத்துவதன் தாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகப் பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அறிக்கை இலங்கை வெளி விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்குப் பதிலளிப்பதற்கு இம்மாதம் 27 ஆம் திகதி வரை கால வரையறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.