இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கரையோர வர்த்தகர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க கூறிய விடையம் இலங்கையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழித்தால் தான் நாடு முன்னோக்கி செல்லும் யதார்த்த பூர்வமாக இருந்தாலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கான வழியை அனுர சட்டரீதியாக குறிப்பிடவில்லை.
உண்மையாக பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பே அந்த நாடுகளில் இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற அமைதியான நாடுகளாக முன்னோக்கி செல்ல மாத்திரமல்ல அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும் மாற வழி திறந்தது.
இலங்கையில் பல்லினங்கள் வாழும் நாடு அவ்வாறு இருக்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் ஒரு இனத்திற்கு சார்பான அதிகாரங்கள் மேலோங்கி இருக்கும் போது ஏனைய தேசிய இனங்கள் நசுக்கப்படுவதற்கு அப்பால் அதிகார மேலாதிக்கம் கொண்ட இனத்தின் மூலமே இனவாதமும் மதவாதமும் கட்டவிழ்க்கப்படுகிறது.
ஆகவே ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களுமே இனவாதம் மற்றும் மதவாதங்களை தங்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலாக செயற்படுத்தியுள்ளனர் தற்போதும் செயற்படுத்துகின்றனர் எனவே இலங்கைத் தீவில் இனவாதம் மற்றும் மதவாதத்தை அடியோடு இல்லாது ஒழித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பாக மாற்ற வேண்டும்.
இதனை பகிரங்க வெளியில் தொடர்ந்து அனுரகுமார திஸநாயக்காவால் கூற முடியுமா?