இலங்கையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மாத்திரமே போஷாக்கான உணவை உட்கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழு கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 10 வருடங்களாக நாட்டில் நிலவும் போஷாக்கின்மை நிலைமை, தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்துள்ள நிலையில், இந்நிலைமையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில்கூடிய போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, உரங்களின் தேவை, எதிர்காலத்தில் விளைச்சல் குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் குழு நாட்டில் கடன் மறுசீரமைப்பு மற்றும் மருந்து பாவனை தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களையும் ஏற்கனவே கேட்டிருந்தது.