இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் – தமிழ்நாடு கவலை

இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன இராணுவத்தினரின் நடமாட்டம் செய்மதிகள் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அனைத்து நகரங்கள் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.