கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ளது.
இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று இலங்கைக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
அதில் நாட்டில் தொடரும் கொரோனா தீரவ நிலைமைகள் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இலங்கைக்கான நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தலில், இலங்கையில் கொரோனா நெருக்கடியிடையே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹோட்டல்கள், போக்குவரத்து நிலையங்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்றுதிரளும் இடங்கள், பல்பொருள் சந்தைகள், விமான நிலையங்கள், கலாசார உற்வச நிகழ்வுகள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் தூர இடங்களில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள், பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, கலிபோர்னியாவில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதி சாந்த சோபன தேரர் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் காணொளித் தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இலங்கையில் தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பௌத்த மக்களின் வெஷாக் பண்டிகை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஒன்றுகூடுகின்ற இடங்களில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் சாந்த சோபன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.