நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சியடையும் சந்தைகளில் நாணய கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருபவரும், ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) பிரயோக பொருளியல் பேராசிரியருமான ஸ்ரிவ் ஹங் (Steve Hanke) சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்படாத பட்சத்தில், அந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக ஒரே நிலையிலேயே காணப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உயர்மட்ட அதிகாரத்தில் பதவி வகிக்கப்பவர்கள், நீண்ட காலமாக ஒரே நிலையில் இருப்பதால் எந்தவொரு விடயத்திலும் மாற்றம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்டுள்ள ஸ்ரிவ் ஹங் (Steve Hanke), சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவியாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை 1965 ஆம் ஆண்டு முதல் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுள்ள போதிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தற்காலிக உதவியாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அவை பயனளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் இலங்கை மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை எனவும் பேராசிரியர் ஸ்ரிவ் ஹங் (Steve Hanke) குறிப்பிட்டுள்ளார்.