இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து, மேலும் உயர் நிலைக்கு செல்ல முயற்சிகளை முன்னெடுப்பதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீன தூதுவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
2021 ஆம் ஆண்டு சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் , சீனத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இலங்கை வாழ் சீனர்களின் சார்பில் தனிநபர் பெயரில் இலங்கையின் பல்வேறு இன மக்களுக்கும் சீன-இலங்கை உறவு மீது அக்கறை செலுத்தும் நண்பர்களுக்கும் உளமார்ந்த மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
கடந்த ஓராண்டில் சீனா – இலங்கை இடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கை இடைவிடாமல் மேம்பட்டு வந்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இரு முறை தொலைபேசியில் உரையாடினர்.
இதனிடையில் தொலைநோக்குப் பார்வையில் சீன-இலங்கை உறவுக்கு வழிகாட்டி இரு நாட்டு ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய உடன்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.
பலதரப்பு அரங்குகளில் சர்வதேசத்தின் நேர்மை மற்றும் நீதியையும் இரு தரப்புகளின் கூட்டு நலன்களையும் பேணிக்காக்கும் வகையில் நாங்கள் பலமுறை ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுள்ளோம்.
கடந்த ஓராண்டில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராடியுள்ளன. இதனிடையில் இலங்கையின் பல்வேறு துறையினர்களும் அளித்த உறுதியான ஆதரவுகளை சீன மக்கள் மறக்க மாட்டார்கள்.
சீனா இலங்கைக்கு பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்ததோடு நிதி ஆதரவுகளையும் வழங்கியுள்ளது. இரு நாட்டு மக்கள் இன்னல்களைக் கூட்டாகச் சமாளித்து வரும் போக்கில் நம் பாரம்பரிய நல்லுறவு மேலும் மேம்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை இரு நாடுகள் முன்னெடுத்து சென்றுள்ளன. பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தியாக விளங்கும் கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் சாதனைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
சீன-இலங்கை தண்ணீர் தொழில் நுட்பத்துக்கான கூட்டு ஆய்வு மையம், தேசிய சிறுநீரக நோய் மருத்துவ மனை உள்ளிட்ட மக்கள் வாழ்க்கை நலன் சார்ந்த சில செயல்திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சில பயன்பாட்டிற்கு வர உள்ளன. இவை இலங்கையின் பொருளாதாரச் சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ‘பி.ஆர்.ஐ’ கட்டுமானம் இலங்கையின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் கொள்கையுடன் ஒன்றிணைவதற்கும் வலுவான ஆற்றலை வழங்கும்.
புதியதோர் ஆண்டில் ஒரு புதிய தொடக்கம் இருக்கும். இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டுஇ சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து மேலும் உயர் நிலைக்கு செல்லவும் மேலதிக சாதனைகளைப் பெறவும் இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்கள் பயன் அடையச் செய்யவும் பாடுபடுகின்றோம்.