இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார். இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையில் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2019 இல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான விதத்தில் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அப்ரீன் அக்தர் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கடற்படை கலத்தை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா விசேட கடல்ரோந்து விமானமொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அது அடுத்தவருடம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோபசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை அமெரிக்க வலுவான சகாவாக கருதுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.