இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளமையை வரவேற்றுள்ள ITJP-யின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, அமெரிக்காவின் இத் தடையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை விதை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில், 2008மற்றும் 2009களில் 11 தமிழர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைக் கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் (2008) 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் தடை விதிப்பானது குறித்த குற்றவாளிகளின் அதிகாரிகளுக்கும் இன்றும் பதவிகளிலிருக்கும் போர்க்குற்றவாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு ஜனாதிபதி பரிந்துரைப்பதும் அதற்கு சாதகமாக ஆணைக்குழுக்களை அமைப்பதும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதும் இன்னும் இலங்கையில் தொடர்கிறது” என்று மேலும் தெரிவித்துள்ளார்.