புத்தம் புது வருட வாழ்த்துகள். இது வழமைபோல வரும் புது வருடம் அல்ல. ஆகவே வாழ்த்துகளும், எதிர்பார்ப்புகளும் கூட வழமைபோல் இருந்திட முடியாது. ‘இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு’, என்ற இன்றைய அடையாளத்தில் இருந்து, ‘இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு’, ‘பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு’ என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தனது புத்தாண்டு செய்தியில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இது ஒரு தேர்தல் வருடம். என்ன தேர்தல் என தெரியாது. ஜனாதிபதியே முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார். ஆகவே எதையும் உறுதியாக நம்பாதீர்கள். எல்லாமே ஊகங்கள்தான். ஆனால், இன்றைய நெருக்கடியில் இருந்து மீள, ஒரு புது அரசாங்கத்தை கொண்டுவரக்கூடிய புது வருடம் இது. அது உண்மை.
‘அரகல’ என்ற கிளர்ச்சிக்கு பிறகு நாட்டில் ஊழலில் ஈடுபடும் திருடர்களை அரசியலில் இருந்து நிரந்தரமாக விரட்டும் கொள்கை மேலோங்கி இருக்கும் காலம் இதுவாகும். இரண்டு கரங்களையும் உயர்த்தி நான் இந்த கொள்கையை ஆதரிக்கிறேன். ஏனென்றால் எனக்கு திருட்டு பிடிக்காது. திருடவும் தெரியாது.
ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் இனவாதத்தை முழுமையாக துடைத்து எறிய வேண்டும். ஊழலை ஒழிப்பதை விட இது கஷ்டமானது. அது எனக்கு தெரியும்.
ஆனால், நான் ஒரு விக்கிரமாதித்தன். மனம் தளரவே மாட்டேன். மீண்டும் மீண்டும், முயற்சிப்பேன். வாருங்கள், நாம் எல்லோரும் முயற்சிப்போம். ‘இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு’, என்ற அடையாளத்தில் இருந்து, ‘இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு’, ‘பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு’ என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்.