இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சீன கப்பல்

சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

இந்த கப்பல் நாளை(16) காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

நாளை(16) முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், கப்பலின் வருகையை தாமதிக்குமாறும் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ்.தைமூர் (PNS Taimur) கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

கடற்படையினரின் மரபிற்கமைய தைமூர் கப்பலுக்கான பிரியாவிடை, கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

தைமூர் கப்பல் இலங்கையிலிருந்து வெளியேறும் போது, கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்கரையில் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் தேடுதல், மீட்பு பயிற்சிகள் அடங்கிய கூட்டு நட்பு கடற்படை பயிற்சியும் இடம்பெற்றது.