இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் பெய்ஜிங்கில் மீளாய்வு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல் 2023ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை – சீன உறவுகள் மற்றும் கூட்டுத்திட்டங்கள் என்பவை தொடர்பில் முழுமையாக பெய்ஜிங்கில் கலந்துரையாடலில் மீளாய்வு செய்யப்படும். அத்துடன் இருதரப்பு புதிய அணுகுமுறைகளுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

பொருளாதார உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையின் முக்கியமானதொரு பங்காளியாக சீனா உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மூன்றாம் கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் விடுவித்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட தீர்மானங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இவ்வாரத்தில் ஜப்பான் செல்கின்றது. ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தனித்து செயற்படுவதனால் இலங்கைக்கு நெருக்கடியானதொரு நிலைமையே உருவாகியுள்ளது.

இவ்வாறானதொரு தருணத்தில் பெய்ஜிங்கில் இடம்பெறுகின்ற இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.