இலங்கை செல்லும் தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் கொவிட் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த மே 24 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த, 3 ஆம் மட்ட எச்சரிக்கையானது பயணம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பது 4 ஆம் மட்ட எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டாம் என்று மாற்றப்பட்டிருந்தது.

தற்போது குறித்த 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டம் தற்போது மீண்டும், 3 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (06) வெளியிட்ட புதிய பயண அறிவுறுத்தலுக்கமைய, கொவிட் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதேவேளை இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றும் அந்த எச்சரிக்கை மட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம், விமான நிலையம், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்த புதுப்பிக்கப்பட்ட அறிவித்தல் ஊடாக சுற்றுலா பயணிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் பரவல் மிகவும் அதிகரித்திருப்பதை காட்டும் வகையில் அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம், இலங்கை தொடர்பில் 3 ஆம் மட்ட சுகாதார எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் கொவிட் வைரஸுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசியைப் செலுத்தியிருப்பின், அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அறிந்து வைத்திருப்பதற்கும் அமெரிக்கத் தூதரகத்தின் கொவிட் – 19 குறித்த இணையப் பக்கத்தைப் பார்வையிடுவதும் சிறந்தது என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.