இலங்கை தமிழ் அரசு கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே கலந்துரையாடல் : வவுனியா சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் 15-05-2025 நடைபெறுகிறது.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடியுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்