இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கை பாரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளது – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.

மூன்று தேர்தல்களின் மக்களின் ஆணையைப்பெற்று தேர்வான அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் அதன் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறான ஊடுருவல் போக்கிலான தன்மையே அதன் பிரதான குறைபாடு என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் மிகத்தெளிவானதொரு பாரபட்சமான தன்மையை வெளிக்காட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு ரீதியான அடிப்படையை சவாலுக்குட்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (4) ஜெனிவா நேரப்படி மாலை 5.30 மணிக்கு இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்றது.

இதன் ஆரம்பத்தில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வெளியிட்டு உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து அவரது அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தொடர்பான 46/1 தீர்மானம் பேரவையில் குறித்தளவிலான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ‘ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறை’ தொடர்பில் அத்தீர்மானத்தின் 6 ஆவது பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் குறைபாடானதும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான தன்மையினைக் கருத்திற்கொண்டு இலங்கையும் ஏனைய சில உறுப்புநாடுகளும் அத்தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இத்தீரமானமானது பக்கசார்பற்றதன்மை, தேர்வுசெய்து இயங்காததன்மை ஆகிய பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி அத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட 60/251 தீர்மானத்தின்படி உறுப்புநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அப்பாற்சென்றதாகவும் காணப்படுகின்றது.

இதுகுறித்து இலங்கையின் நிலைப்பாடு என்னவென்பதை கடந்த முதலாம் திகதி பேரவைக்கு அறிவித்திருந்தேன்.

இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்க்கின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறப்பட்டதன்படி, நாம் சர்வதேச சட்டங்களுக்கும் பிரகடனங்களுக்கும் மதிப்பளிக்கின்ற நாடாவோம்.

இதுவிடயத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் குறித்த விடயங்களை பேரவையுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய தொடர்புடைய கட்டமைப்புக்களுடனும் நாம் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்திருக்கின்றோம்.

உயர்ஸ்தானிகரால் இந்தப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன என்று நாம் கருதுகின்றோம்.

அதன் முக்கிய குறைபாடு எதுவெனில், இலங்கையில் நடத்தப்பட்ட மூன்று தேர்தல்களில் மக்களின் ஆணையின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஊடுரும் போக்கிலான அதன் தன்மையேயாகும்.

அதுமாத்திரமன்றி இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், மிகத்தெளிவானதொரு பாரபட்மான தன்மை தென்படுகின்றது. ஏனெனில் மனித உரிமைகள் பேரவையானது அதன் ஏனைய உறுப்புநாடுகள் தொடர்பில் இவ்வாறானதொரு விசாரணைப்பொறிமுறையை முன்னெடுக்காது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கட்டமைப்பின் அடிப்படையை சவாலுக்குட்படுத்துகின்றது.

எவ்வித அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேலெழுந்தவாரிய ஏராளமான விடயங்கள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து நாம் கவலையடைகின்றோம் என்று குறிப்பிட்டார்.