இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மதுபானம், சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறலாம் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் முழுமையான வருமானமாக ரூ. 2,284 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் செலவீனமாக 3,912 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையாக 1,628 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 7 தினங்களுக்கு இடம்பெற்று, 22ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்தும், 3ம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்களில், இது மிக முக்கியமானதொரு வரவு செலவுத்திட்டமாக கருதப்படுகின்றது.

2019ம் ஆண்டு முதல் இலங்கை தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன் ஊடாக, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ முயற்சிக்கும் தருணத்திலேயே, கோவிட்-19 பெரும் தொற்று இலங்கையையும் பாதித்து, அனைத்து துறைகளிலும் தாக்கத்தை செலுத்தியது.

இவ்வாறான பாதிப்புக்களுக்கு மத்தியில், 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (நவம்பர் 12) சமர்பிக்கப்பட்டது. அதன் 10 முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

1. காணாமல் போனோருக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. 3 வருடங்களில் மலையக மக்கள் வாழும் லயின் வீடுகளை இல்லாது செய்வதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டிற்காக தனி வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

4. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வேன் மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5. சுமார் 2 தசாப்தங்களுக்கு அதிகமாக காணப்பட்ட அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே தடவையில் தீர்க்கும் வகையில், மேலதிகமாக 30,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

6. 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆட்சி செய்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு அதிவிரைவு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. நாடு முழுவதும் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகளை பாதுகாக்கும் நோக்கில், முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

9. மதுபானத்திற்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதுடன், சிகரட்டிற்கான விலையும் உடன் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

10. விபத்துக்குள்ளாகும் வாகன சாரதிகளிடமிருந்து நட்டஈட்டு தொகையொன்றை அறவிடுவதற்கான யோசனையும், எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த பட்ஜெட் உரையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தால் மாத்திரமே ஓய்வூதியம் கிடைக்கும் என்ற சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கால எல்லையை 10 வருடங்கள் வரை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.