இலங்கை பொருளாதார நெருக்கடி: யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நிலை என்ன? தமிழ் பகுதிகளில் அமைதி ஏன்? பிபிசி கள ஆய்வு

இலங்கை முழுவதுமே நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, நாட்டின் வட மாகாணத்தையும் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவரை மாகாணத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தாலும் வெளித் தோற்றத்திற்கு அமைதியாகக் காட்சியளிக்கிறது இந்தப் பிரதேசம். காரணம் என்ன?

இலங்கை முழுவதுமே உள்ள பொருளாதார நெருக்கடி வடமாகாணத்தையும் கடுமையாக உலுக்கி வருகிறது. எரிவாயுவை வாங்கவும் மண்ணெண்ணெய் வாங்கவும் மக்கள் நீண்ட வரிசைகளில் இங்கேயும் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

பிற பகுதிகளைப் போல எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இங்கேயும் இருக்கிறது. ஆனால், எரிவாயு கிடைக்காவிட்டால் மண்ணெண்ணை அடுப்பு, விறகு அடுப்பு போன்றவற்றைப் பயன்படுத்தும் வழக்கமும் இங்கே இருக்கிறது.

எரிவாயுவுக்கான வரிசையில் நிற்கும் பலரிடம், சிலிண்டர்கள் பதுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

எரிவாயுக்கான வரிசையில் நின்றபடி பிபிசியிடம் பேசிய யாழ்ப்பாணம் டவுனைச் சேர்ந்த ராஜேஷ், “கப்பலில் வந்திறங்கும் சிலிண்டர்களில் பாதியை கடைக்காரர்கள் பதுக்கிவிடுகிறார்கள். யுத்த காலத்தில் இதைவிட பெரிய கஷ்டத்தையெல்லாம் அனுபவித்துவிட்டோம். விறகு அடுப்புதானே அப்போது பயன்படுத்தினோம்? இப்போது இது பழகிவிட்டதால் சிரமமாக இருக்கிறது” என்கிறார்.

யாழ்ப்பாணம் மட்டுமல்ல, முல்லைத் தீவு, கிளிநொச்சி என வட மாகாணத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

கிளிநொச்சியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் பத்மராணியின் மகன் காணாமல் போனவர். இன்னொரு மகன் போரில் உயிரிழந்துவிட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகனைத் தேடியபடியே பேத்தியுடன் தனியாக வாழ்ந்துவரும் புஷ்பராணி, பொருட்கள் தட்டுப்பாட்டால் தான் நடத்திவந்த கடையை மூடிவிட்டார். இம்மாதிரி தனித்து வாழ்பவர்களுக்கு கடுமையான சவால்களை முன்வைக்கிறது இந்த நெருக்கடி.

“1990ல் என்னுடைய மகன் காணாமல் போனான். இன்னொரு மகன் போரில் ஈடுபட்டு 2000ல் சடலமாக வீடு வந்து சேர்ந்தான். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். இப்போது கடையையும் மூடியாகிவிட்டது. காசுக்கே வழியில்லை. பெட்ரோல் இல்லை. மண்ணெண்ணை இல்லை. மின்சாரமும் இருப்பதில்லை. சுத்தமாக வாழவே முடியாத நிலை” என்கிறார் பத்மராணி.

இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவுப் பகுதியில் தற்போது பெரும்பாலும் விவசாயமே நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்தப் பொருளாதார நெருக்கடி உருவாக்கிய இயற்கை உரப் பிரச்சனை, மின்சார தட்டுப்பாடு, எரிபொருள் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள். இயற்கை உரப் பிரச்சனையால் வருமானம் குறைந்தது ஒருபக்கம் இருக்க, இப்போது மண்ணெண்ணை, மின்சாரம் போன்றவை இல்லாததால், பெரும் சிக்கலில் இருக்கிறார்கள்.

“ஒருவருக்கு மற்றொருவர் உதவ முடியாத காலம் என்று ஒன்று உண்டல்லவா? இறுதிக் கட்டப் போரின்போது அப்படித்தான் இருந்தது. இப்போதும் அப்படியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, எங்கேயாவது கேஸ் சிலிண்டர் கிடைக்குமென்று தெரியவந்தால் அதை எடுக்கப்போகும் ஒருவர் அதை மற்றவருக்குச் சொல்ல மாட்டார். ஏனென்றால் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைப்பார். அதேபோல மண்ணெண்ணைய்க்காக வரிசையில் நிற்கும் ஒருவரும் மற்றொருவருக்குச் சொல்ல மாட்டார். தான் மட்டும் வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பார். இப்படியாகத்தான் நிலைமை இருக்கிறது” என்கிறார் யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளரான நிலாந்தன்.

நெருக்கடி இருந்தாலும் அமைதியாக…
இந்தப் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து நாட்டின் தென்பகுதியிலும் கண்டி போன்ற நகரங்களிலும் நடக்கும் போராட்டங்களைப் போல இந்தப் பகுதிகளில் போராட்டங்கள் ஏதுமில்லை. சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒருங்கிணைத்த சிறிய போராட்டங்களைத் தவிர, பொதுவாக அமைதியாகவே காட்சியளிக்கிறது வடமாகாணம்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் பலரது வீடுகளில் ஒருவராவது வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்கள் அனுப்பும் பணம் ஒரு சிறிய அளிவில் நெருக்கடியை எதிர்கொள்ள உதவுகிறது.

இது தவிர, வட மாகாணத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று விவசாயம். இதனால், அரிசி, காய்கறி போன்றவற்றைப் பெறுவதில் பிரச்சனையில்லை. மேலும், தொடர்ந்து உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட பொருளாதார முற்றுகைகளை எதிர்கொண்டதால், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயாராக்கும் மனப்போக்கு இங்கு பலரிடம் இருக்கிறது.

“நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கி, அதில் சில சொட்டுகளை மட்டும் எஞ்சினுக்குள் ஊதி இரு சக்கர வாகனங்களை இயக்கிய காலமெல்லாம் இருக்கிறது. அந்த நெருக்கடியையெல்லாம் எதிர்கொண்டுவிட்டதால் இது பெரிதாகத் தெரியவில்லை” என்கிறார் ஒருவர்.

ஆனால், அதிருப்திக் குரல்கள் வெளிப்படையாக ஒலிக்காததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில், ராணுவத்தினரின் எண்ணிக்கை வடக்கில் அதிகம். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் செல்லும்போது, ஒவ்வொரு சில கி.மீ. தூரத்திலும் ராணுவத்தினரின் சோதனைச் சாவடி தென்படுகிறது. பல இடங்களில் கிராமத்தினர் இந்த விவகாரம் குறித்து பேசவே தயங்குகிறார்கள்.

“இங்கிருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும், தொடர்பில்லாத கிராமங்களில் வசிக்கும் மக்களும் இந்த நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாகவும் யுத்தத்திற்குப் பிறகு இருந்த ராணுவ மயமாக்கம் காரணமாகவும் இந்த மக்கள் போராட்டங்களில் இறங்குவது மிகவும் குறைவாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மத்தியில் ஒரு பீதி இருக்கின்றது. அச்சம் இருக்கிறது” என்கிறார் யாழ்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர்.

இது தவிர, தென் பகுதி மக்களுடன் இணைந்து போராடும்போது தங்களுடைய தனித்துவமான கோரிக்கைகளும் அரசியலும் பலவீனமடையும் என்ற எண்ணமும் இங்குள்ள அரசியல் இயக்கங்களிடம் இருப்பதால் அவர்கள் போராட்டங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் அவர்.

இதுதவிர, தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகளைக் கொண்டிக்கவில்லையென்ற விமர்சனங்களும் இருக்கின்றன. “ஆகவே, தங்கள் வழிகாட்டுதல்களுக்காக அரசியல் தலைமைகளை எதிர்பார்ப்பதையே தமிழ் மக்கள் விட்டுவிட்டார்கள்” என்கிறார் அகிலன்.

தொடர்ந்து நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துவரும் வடபகுதி தமிழ் மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியையும் மிகுந்த சிரமத்தோடு எதிர்கொள்கிறார்கள். ஆனால், எத்தனை நெருக்கடிகளை அடுத்தடுத்து எதிர்கொள்வது என்ற கேள்வியும் அவர்களிடம் இருக்கிறது.