இலங்கை பொலிஸுக்கான வெளிநாட்டுப் பயிற்சியை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!

இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை முழுமையாக நிறுத்துமாறு, ஸ்கொட்ரலாந்திற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இடைநிறுத்தப்பட்ட பயிற்சியின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு அழைப்பு விடுத்துள்ளது.

அண்மைய கைதுகளின் போதான மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில் மே மாதம் ஸ்கொட்லாந்து பொலிஸ் இலங்கை பொலிஸுக்கான யிற்சியை இடைறுத்த தீர்மானித்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பொலிஸ் பயிற்சியை இடைநிறுத்திய பிரித்தானியா இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் விபரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரால் தொடர்ச்சியாக நடத்தப்படும் பயிற்சி, இலங்கை பொலிஸாரின் மனித உரிமை மீறல்களை அனுமதிக்கும் அபாயங்கள் காணப்படுவதாக, ஸ்கொட்லாந்து நீதி அமைச்சர் கீத் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில், நான்கு மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் மனித உரிமை செயற்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதையில் இருந்து விடுதலை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் பெக்ஸ் கிரிஸ்டி ஸ்கொட்லேண்ட் ஆகிய அமைப்புகள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

“இலங்கை மற்றும் பிற இடங்களில் எங்களது அனுபவம் என்னவென்றால், பொலிஸாரின் ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான விருப்பம் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் இல்லாத நிலையில் எவ்வளவு ‘பயிற்சி’ அளித்தாலும் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையாது. அதற்குப் பதிலாக என்ன நடக்குமென்றால், தொடர்ந்து பயிற்சி அளிப்பது ஊழல் நிறைந்த பொலிஸுக்கு ஒப்புதல் அளிக்கும்”

இலங்கை அரசாங்கமும் பொலிஸும் “மறுசீரமைப்பில் உண்மையான ஆர்வம் காட்டும் வரை” தற்போதைய பயிற்சியை நிறுத்துவதோடு, தற்போதைய பயிற்சி மீளாய்வு மற்றும் பகுப்பாய்வு விபரங்களை வெளியிடுமாறு குறித்த நான்கு அமைப்புகளும் கோரியுள்ளன.

ஸ்கொட்லாந்மு பொலிஸ் இலங்கை பொலிஸுக்கு பயிற்சி அளிக்க பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு நிதியுதவி அளிக்கின்றது.

சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானியா இலங்கை பொலிஸுக்கான பயிற்சியை இரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது.

சித்திரவதைக்குப் பொறுப்பேற்பதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்த குறைந்தபட்சம் மூன்று இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா பயிற்சி அளித்ததாக, ரெட்ரஸ் (Redress) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் இணைந்து 2019 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தது.

எனினும், 2012 ஆம் ஆண்டு முதல், 90 தடவைகள், பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள் அல்லது பொலிஸ் ஊழியர்கள் பயிற்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்து பயிற்சி இடைநிறுத்தப்பட்டமை குறித்து இலங்கை பொலிஸோ அல்லது அரசாங்கமோ இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.